ஒரே நாடு ஒரே தேர்தல்:
இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலையும், மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களையும் தனித்தனியாக நடத்தி வருகிறது. இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு, 'நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதிக செலவினம் ஏற்படுகிறது' என்பது போன்ற காரணங்கள் அரசால் முன்வைக்கப்படுகிறது.
மறுபுறம், `இவ்வாறு தேர்தல் நடத்தும்போது, மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் முழு பதவிக்காலம் முடியும் முன்னரே கலைக்கப்படுமா? அப்படி கலைக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகள் எப்படி எதிர்வினையாற்றும்?' என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையமும் தெரிவித்தது.

எடப்பாடி ஆதரவு:
இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம், தேசிய சட்ட ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது. இதன்படி பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. அதில், ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன் ஒருபகுதியாக அ.தி.மு.க-வின் `பொதுச்செயலாளர்' என்று குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமியிடம் சட்ட ஆணையம் சமீபத்தில் கருத்து கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்து எடப்பாடி எழுதியிருக்கும் கடிதத்தில், 'அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அதேபோல பா.ஜ.க இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கிறது.

2018-ல் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடந்த 2018-ம் ஆண்டில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை தேசிய சட்ட ஆணையம் கேட்டிருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு ஜுன் 29, 2018-ல் தேசிய சட்ட ஆணையத்துக்கு, 'தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் 2021-ம் ஆண்டு வரை இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால், தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் குறைக்கப்படும். எனவே, அ.தி.மு.க-வின் ஆதரவு இல்லை' என்று எழுத்துபூர்வமாக தெரிவித்தது. மேலும், ஜுலை 7, 2018-ல் டெல்லியில் தேசிய சட்ட ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் அ.தி.மு.க தரப்பில் கலந்துகொண்டவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறார்கள்.

இன்று ஆதரிப்பது எப்படி நியாயம்?
அப்போது அனைத்து மதச்சார்ப்பற்ற கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தன. ஆனால் இன்று அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது எந்த வகையில் நியாயம்? இவர்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்று தங்களை நிரூபித்திருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு. ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சா?
எப்படியாவது ஆட்சி, அதிகாரத்தில் வந்துவிட மாட்டோமா என்ற நப்பாசையில் இருக்கும் அ.தி.மு.க-வினரை தமிழ்நாட்டு மக்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களின் எண்ணமும் ஈடேறாது. அரசியல் அமைப்புச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்கிறது. ஆனால், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்த திட்டத்துக்குத் துணைபோகிறவர்களை மக்கள் ஒருகாலும் மன்னிக்கமாட்டார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிலைப்பாடு அவ்வப்போது மாறும்:
இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா, "ஓரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டுக்கு அ.தி.மு.க ஆரம்பம் முதலே ஆதரவுதான். 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் வந்தால் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நம்புகிறார்கள்.
ஆனால் 2018-ல் ஆட்சியில் இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அப்படிதான் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு அவ்வப்போது மாறுபடும். அந்தவகையில் தான் எடப்பாடியின் நிலைப்பாடு தற்போது மாறியிருக்கிறது.

காங்கிரஸால் சிக்கல்:
முன்னதாக கடந்த 1952, 1957, 1962, 1967 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரே தேர்தல்தான் நடந்தது. பிறகு காங்கிரஸ் 47 முறை அரசை கலைத்தார்கள். அப்படி கலைக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்பட்டதில் சிக்கல் வந்தது. உதாரணத்துக்கு 1980-ல் கிட்டத்தட்ட 2 முதல் 3 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டிய அரசுகளை எல்லாம் கலைத்தார்கள்.
1977-ல் எம்.ஜி.ஆர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரின் பதவி காலம் 1982 வரை இருந்தது. ஆனால் 1980-ல் ஆட்சியை கலைத்து விட்டார்கள். இப்படி கலைக்கப்பட்டு தேர்தல்கள் நடந்ததால்தான் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை சாத்தியம் இல்லமால் போனது. இப்போது முயற்சி செய்தால் வரும் 10 ஆண்டுகளில் கொண்டுவந்துவிடலாம் என நம்புகிறார்கள்" என்றார்.
மேலும் படிக்க `ஒரே நாடு ஒரே தேர்தல்' - அதிமுக ஆதரவு நிலைப்பாட்டின் பின்னணி என்ன?!