டெல்லி சட்டசபையில் மூன்று நாள் குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று டெல்லி ஆளுநர் வி.கே சக்சேனா அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அடிஷி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``நமது தலைமீது அமர்ந்துள்ள ஆளுநர் என்பவர் யார்? எங்கிருந்து வந்தார்? எனது வீட்டு பாடங்களை எனது ஆசிரியர்கள் கூட இந்த அளவு ஆய்வு செய்ததில்லை. ஆனால், ஆளுநர் எனது ஒவ்வொரு கோப்புகளையும் அந்த அளவு ஆய்வு செய்கிறார்.
என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தது மக்கள் தான். ஆளுநர் எனக்கு தலைமை ஆசிரியரல்ல. ஆளுநர் சக்சேனா பண்ணையார் மனநிலை கொண்டவர். அதனால் தான் ஏழை குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதை அவர் தடுக்கிறார். ஆனால், பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர். நமது குழந்தைகளை எங்கு படிக்க அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிக்க இவர் யார்?
ஆளுநரைப் போன்றவர்களால் தான் நாடு பின்தங்கி இருக்கிறது. ஒருமுறை நான் ஆளுநரை சந்தித்தபோது, தன்னால் தான் டெல்லி மாநகராட்சி தேர்தலில் 14 வார்டுகளை பா.ஜ.க கைப்பற்றியதாகவும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளையும் பா.ஜ.க கைப்பற்றும் என்றும் கூறினார். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை.... நாளை நாங்களே கூட மத்தியில் ஆட்சிக்கு வரலாம்.

போலீஸ், நிலம், பொது ஒழுங்கு ஆகியவற்றைத் தவிர, இந்த விவகாரங்களில் ஆளுநர் சொந்தமாக முடிவெடுக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை கவனிக்க வேண்டும்" எனக் கடுமையாக சாடினார்.
அதைத்தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ அடிஷி, "ஆசிரியர்கள் பின்லாந்தில் பயிற்சி பெறக்கூடாது என்று ஆளுநர் உத்தரவிட்டது சட்டவிரோதமானது. அவர் சொந்தமாக முடிவெடுக்கக்கூடாது. அவர் அரசியல் சட்டப் பதவி வகிக்கிறாரே தவிர பா.ஜ.க-வின் ஏஜென்ட் அல்ல" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க ``ஆளுநர் ஒன்றும் தலைமை ஆசிரியரல்ல; இவர்களால் தான் நாடு பின்தங்கி இருக்கிறது" - அரவிந்த் கெஜ்ரிவால்