நொறுக்குத்தீனி இல்லாத வீக் எண்டு வேஸ்ட் என்றே சொல்லலாம். விடுமுறை நாள்களில் விருந்தே சாப்பிட்டாலும், கொறிப்பதற்கு ஏதாவது இருந்தால்தான் அந்த நாள் நிறைவடையும் பலருக்கும். அதிக வேலையில்லாத, அதே நேரம் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் சிலவற்றின் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக.... வீக் எண்டை என்ஜாய் செய்யுங்கள்...
இன்ஸ்டன்ட் போண்டா
தேவையானவை:
இட்லி மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
அரிசி மாவு, ரவை - தலா 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக ஒன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, எண்ணெயில் விட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால், இன்ஸ்டன்ட் போண்டா ரெடி.
மிக்ஸ்டு வெஜிடபிள் போண்டா
தேவையானவை:
முட்டைக்கோஸ், கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம் - ஒரு கப்
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கடலை மாவு, மைதாமாவு - தலா ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
முட்டைக்கோஸ், கேரட், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மைதா மாவு, கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, உப்பு, சோயா சாஸ், பெருங்காயத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, தண்ணீர் விடாமல் பிசிறி விடவும். பிறகு இதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்தில் பிசையவும். விரல்களை தண்ணீரில் நனைத்து, மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
பாலக் கீரை பக்கோடா
தேவையானவை:
பாலக் கீரை - ஒரு கப்
பெரிய வெங்காயம் - அரை கப்
சோம்பு - அரை டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன்
கடலை மாவு - ஒன்றரை கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
பாலக் கீரையின் பின்புறம் உள்ள தண்டை நீக்கிவிட்டு இலையை மட்டும் பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும். பூண்டு, சோம்பு இரண்டையும் இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பாலக் கீரை, பெரிய வெங்காயம், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு இடித்த பூண்டுக் கலவை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசையவும். இதில் தண்ணீர் சேர்க்கக் கூடாது. வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் எடுத்து மாவில் சேர்த்து கரண்டியால் பிசறி விடவும். பிறகு மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து, விருப்பப்பட்ட அளவில் மாவை கிள்ளி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பச்சைப்பயறு கட்லெட்
தேவையானவை:
பச்சைப்பயறு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
பச்சைப்பயறை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதை வேகவைத்து மசிக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் மசித்த பச்சைப்பயறு, உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசையவும். இதில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இதை சிறு சிறு உருண்டைகளாக்கி, விருப்பமான வடிவத்தில் தட்டி வைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து சூடானதும், தட்டிய கட்லெட்டைச் சேர்த்து இருபுறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.
மேலும் படிக்க இன்ஸ்டன்ட் போண்டா, பாலக் கீரை பக்கோடா, பயறு கட்லெட் - வீக் எண்டு ரெசிப்பீஸ்