அனைவருக்கும் பசுமை வணக்கம்!
உங்கள் பசுமை விகடன் இதழ் 17-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பசுமை பயணத்தில் பங்கு கொண்டுள்ள அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது. கடந்த 16 ஆண்டுகளில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறோம். அதில் முக்கியமான இரண்டு மாற்றங்கள் மாநில அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெற்றுள்ளன.
ஆம், 2007-ம் ஆண்டு, பசுமை விகடன் இதழ் தொடக்க விழாவின்போதே, மாவட்ட ஆட்சியர்களின் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரம் வளர்ப்பு என்பது மக்கள் இயக்கமாக உருவெடுக்காத நேரம் அது.
மரம் வளர்ப்பு குறித்து முதல் இதழிலிருந்தே முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகிறோம். அது இந்த இதழ் வரை தொடர்கிறது. இப்போது ஊர்தோறும் பசுமை ஆர்வலர்கள் உருவாகி வருகிறார்கள். இந்தப் பச்சை மனிதர்களைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தி வருவதை அறிவீர்கள். இவை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டியதுபோல,
‘தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம், 10 ஆண்டுகளில் 250 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வழக்கமான அரசு அறிவிப்புபோல, கன்றுகளை மட்டும் நடவு செய்துவிட்டு, அதன் மீது கட்டடங்களை எழுப்பும் பாதகத்தைச் செய்யக் கூடாது என்பதுதான் நம் எல்லோரின் விருப்பம்; ஆவல்.
அடுத்து, ‘சர்வதேச சிறுதானிய ஆண்டு - 2023’ என்று ஐ.நா சபை அறிவித்து, அதைக் கொண்டாடியும் வருகிறது. இந்த அறிவிப்புக்குப் பின்னால், இந்தியாவின் முயற்சி உள்ளதை உலகம் அறியும்.
தமிழ்நாட்டில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தேடினால்தான் கிடைக்கும் என்ற அளவிலே சிறுதானியங்களின் சாகுபடி இருந்தது. கேழ்வரகுக் களியும், கம்பங்கூழும் ஏழைகளுக்கான உணவு என்று ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று சிறுதானிய உணவுகள் சிறு உணவகங்கள் தொடங்கி ஐந்து நட்சத்திர உணவகங்கள் வரை கிடைக்கத் தொடங்கியுள்ளன.
இப்படி ஒரு நல்ல மாற்றம் உருவாக வேண்டும் என்கிற கனவோடுதான், ஆரம்பத்திலிருந்தே சிறுதானியங்களுக்கு மரியாதை கொடுத்து வருகிறது பசுமை விகடன்.
அடுத்து, பசுமை விகடனுக்கேயுரித்தான... ‘படிச்சோம், விதைச்சோம்’ கட்டுரைகள், இதழ் முழுக்க நிறைந்துள்ளன. பசுமை விகடன் மூலம் பலன்பெற்ற வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் அவற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘பசுமை விகடன் என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் அல்ல’ என்பதைக் களத்தில் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
என்றென்றும் இணைந்தே இருப்போம், ஓர் இயக்கமாக!
- ஆசிரியர்

மேலும் படிக்க சிறுதானியங்களுக்கு மரியாதை!