நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இரண்டு நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குன்னூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் 157 -வது ஆண்டு விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் பங்கேற்ற ஆ.ராசா மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், "இந்தியாவில் மட்டும்தான் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட ஒரு மோசமான வரலாறு கொண்ட மக்களாக நாம் இருந்திருக்கின்றோம். சிலருக்கு மட்டுமே கல்வி சாத்தியப்பட்ட நிலையில் இருந்து மாற்றி, சாதாரண மக்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என எண்ணிய மதங்களில் கிறிஸ்தவம் முதலாவது மதம் என்பதை நான் மனமாற ஒப்புக்கொள்கிறேன்.

நன்கு படித்து கல்வி அறிவைப் பெற்ற பிறகு சாதி மதங்களைக் கடந்து மனிதனாக வரவேண்டும். ஆனால், இன்றைக்கு மதம் அரசியலில் புகுந்திருக்கிறது.
நான் சாதாரண கிராமத்தில் படித்தவன். சிறு பிள்ளைகள் இங்கு ஆங்கிலம் பேசுவதைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது. இதுபோன்ற பள்ளி கூடத்தில் நான் நுழைந்ததே கிடையாது. வாழ்நாள் முழுக்க அரசு பள்ளியிலும், அரசு கல்லூரியிலும் படித்தேன். ஆனால் நான் பேசுகின்ற ஆங்கிலத்தை நாடாளுமன்றத்தில் எவரும் குறை சொன்னதில்லை" என்றார்.
மேலும் படிக்க நீலகிரி: ``அரசுப் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே படித்தவன் நான்" - தனியார் பள்ளி விழாவில் ஆ.ராசா