"அப்பாவுக்குத் தம்பி உதயா மீது தனிப்பாசம். சின்ன வயசுல உதயா மதுரை வரும்போதெல்லாம், அப்பா தூக்கிவைத்துக் கொஞ்சுவார். மதுரையில் அப்போதெல்லாம் சாலைகள் சரியாக இருக்காது. உதயாவுக்கு வலிக்கக்கூடாதுன்னு காரைக்கூட அப்பா மெதுவாத்தான் ஓட்டுவார், அப்படியொரு பாசம். உதயாவும் 'பெரியப்பா... பெரியப்பா' என்று பாசமாக இருப்பார். அந்தப் பாசத்தால்தான் பெரியப்பாவைச் சந்தித்து வாழ்த்து வாங்கியுள்ளார்" என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து பேசுகிறார் மு.க.அழகிரியின் மூத்த மகள் கயல்விழி அழகிரி.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் தனது பெரியப்பா மு.க.அழகிரியை திடீரென்று சந்தித்து, அரசியல் களத்தைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதனால், `மீண்டும் கட்சிக்குள் அழகிரி என்ட்ரி ஆகிறாரா' என்கிற பரபரப்பு கேள்விகள் பரவிக்கொண்டிருக்க இதுகுறித்து, கயல்விழி அழகிரியைத் தொடர்புகொண்டு பேசினேன்.

"தம்பி உதயநிதி சந்தித்தது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது என்று அப்பா சொன்னமாதிரிதான், நாங்களும் எல்லையில்லாத மகிழ்ச்சியில் இருக்கிறோம். 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்பார்கள். தை பிறந்திருக்கு. நல்ல விஷயம் நடந்திருக்கு. தம்பி உதயா, நேற்று அப்பாவை வந்து சந்தித்ததில், என்னைப் பொறுத்தவரை ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் கிடையாது. ஏனென்றால், உதயாவுக்கு அப்பாமேல அன்பு, மரியாதை எப்பவுமே உண்டு. சிறு வயதிலிருந்தே உதயா, அப்பா மீது பிரியமாக இருப்பார். ஸ்கூல் லீவ் விடும்போதெல்லாம் செந்தாமரையும் உதயாவும் மதுரைக்கு வந்து எங்களுடன் இருப்பார்கள். பாட்டி வழியில் முதல் ஆண் பேரக்குழந்தை உதயாதான். அதன்பிறகுதான் தம்பி துரை, அருள் எல்லோரும் பிறந்தார்கள். அதனால், உதயா மீது எல்லோருக்கும் தனிப்பாசம்.
குறிப்பா, என் தங்கை அஞ்சுகச்செல்விக்கும் உதயாவுக்கும் ஒரு வருடம்தான் வயசு வித்தியாசம். ரெண்டு பேருக்கும் நல்ல பாண்டிங் உண்டு. தம்பி துரையுடனும் உதயாவுக்கு நல்ல நெருக்கம். நாங்கள் என்றில்லை. குடும்பத்தினர் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். எங்கே பார்த்தாலும் "எப்படிக்கா இருக்க?" என்று அக்கறையுடன் நலம் விசாரிப்பார். அதனால், இது மகிழ்ச்சியான தருணம். அந்தத் தருணத்தில், நான் சென்னையிலிருந்ததால் அருகிலிருந்து பார்க்க முடியவில்லை.

எங்களுக்குப் பொங்கல்தான் பெரிய பண்டிகை. அந்தப் பண்டிகையில், உதயா அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கியதில் ரொம்ப மகிழ்ச்சி. உதயா ரொம்ப சாஃப்டானவர். சிறு வயதிலிருந்தே எல்லோரிடம் மரியாதையாகத்தான் பேசுவார். காமெடியைக்கூட டைமிங்காகப் பேசுவார். எளிமையாக இருப்பார். அதெல்லாம்தான் தம்பியை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்துள்ளது" என்பவரிடம், "உதயநிதி அமைச்சர் ஆகியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்டோம்.
"தம்பி உதயநிதிக்கு அமைச்சர் ஆவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது. பத்து, பதினைந்து படத்தில் நடித்துவிட்டு அமைச்சராக என்ன தகுதி இருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கிறார்கள். 'கலைஞரின் பேரன்', 'கலைஞர் என்ற ஆலமரத்து நிழலில் பல வருடங்களாக வளர்ந்த பிள்ளை' என்பதைவிட உதயாவுக்கு என்ன தகுதி வேண்டும்? தாத்தாவின் அரசியலை உதயா பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறார். அதைவிட என்ன பெரிய அரசியல் தகுதி வேண்டும்?

ஒரு பள்ளியில் திறமையான தலைமை ஆசிரியர் படிப்பு சொல்லிக் கொடுப்பதைவிட, அவரின் செயல்பாடுகளைப் பார்த்தே கற்றுக்கொள்ளலாம், தகுதியானவர்களாகிவிடலாம். அப்படித்தான், உதயாவும் தாத்தாவின் அரசியலைப் பார்த்துள்ளார். தாத்தாவின் அரசியல், பேச்சு, இலக்கியம் என எல்லாவற்றையும் உள்வாங்கியுள்ளார். அதேபோல, சித்தப்பாவின் அரசியல் ஆளுமைத்திறனும் உதயாவுக்கு உண்டு. இந்தத் தகுதிகள் போதாதா? தகுதி இருப்பதால்தான் மக்கள் ஏற்றுக்கொண்டு எம்.எல்.ஏ ஆக்கினார்கள். தமிழகத்துக்குச் சிறப்பான, துடிப்பான அமைச்சர் கிடைத்திருக்கிறார்" என்பவரிடம் "தி.மு.க-வில் எப்போது அப்பாவை இணைப்பார்கள்?" என்று கேட்டோம்.

"இது குடும்பம். பெரியம்மா, பெரியப்பாவைச் சந்தித்து வாழ்த்து வாங்குவதற்காக உதயா வந்துள்ளார். இதனையும் கட்சியையும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அப்பாவை கட்சியில் சேர்ப்பதும் சேர்க்காமல் இருப்பதும் சித்தப்பா எடுக்கும் முடிவு. அதை அனைவரும் சேர்ந்து பேசி எடுப்பார்கள். நல்ல முடிவாக எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டால், பாசிட்டிவாக நடக்கும். நல்லதே நினைப்போம். அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்" என்கிறார் புன்னகையுடன்.
மேலும் படிக்க "அப்பாவை உதயநிதி சந்தித்ததில் எனக்கு ஆச்சர்யம் கிடையாது; ஏனென்றால்..." - கயல்விழி அழகிரி