ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட ஈரோடு, பெரியார் நகரில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் முகவர்களை, முன்னாள் அமைச்சர்களான கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் ஆகியோருக்கு ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக பெரியார் நகர் அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மனோகரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், சுமார் 100 பெண்கள் ஆரத்தி எடுத்தும் முன்னாள் அமைச்சர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.
கோபி எம்.எல்.ஏ.வும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
``தமிழ்நாட்டில் முன்பு ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. உள்ளாட்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணி, கல்வி என அனைத்துத் துறைகளிலும் சிறந்த ஆட்சியை நிறைவேற்றி தந்தார். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் மன மாற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம் மக்கள் நினைத்த எந்த பணிகளும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்குவது, ஸ்கூட்டிக்கு மானியம், இலவச மடிக்கணினி, மிக்சி- கிரைண்டர், ஆடு- மாடுகள் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போல மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கூறிய திட்டம், எரிவாயுவுக்கு ரூ. 100 மானியம் வழங்குவதாக கூறியது, தாலிக்குத் தங்கம் போன்ற எந்த திட்டத்தையும் நிறைவேற்றப்படவில்லை. முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 3 லட்சம் முதியோருக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தில் ஆட்சி மாறிய பின் எந்த மக்கள் நலத்திட்டங்களையும் தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என்பதால் மக்கள் மத்தியில் தி.மு.க ஆட்சி மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
எனவே அமைதியான முறையில் நேர்மையான வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெறுவோம். இந்தத் தொகுதியை பொருத்தவரை அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.
விரைவில் அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். அதன் பிறகு எல்லோரும் வியக்கத்தக்க வகையில் அ.தி.மு.க தேர்தல் பணியாற்றி வெற்றி பெறுவோம்.
சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தான் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆச்சர்யமூட்டும் வகையில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக கிடைக்கவே வாய்ப்புள்ளது. மனுத்தாக்கல் முடிந்த பிறகு அதை நீங்களே (பத்திரிகையாளர்கள்) புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், `தேர்தலின்போது மெகா கூட்டணி அமைப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதுவரை த.மா.கா தவிர வேறு எந்தக் கட்சியும் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே’ என்றும், `அ.தி.மு.க நான்காக பிளவுபட்டுள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளனர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் பிரிவாக பிரிந்துள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் என்று டிடிவி.தினகரன் கூறுகிறார். ஜான் பாண்டியன் இரட்டை இலை உள்ள கட்சிக்கு தான் ஆதரவு என்கிறார். இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், "பொறுத்திருந்து பாருங்கள், சின்னம் எங்களுக்கு தான்" என்று முடித்துக் கொண்டார்.
மேலும் படிக்க ஈரோடு கிழக்கு: ``மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது; அதிமுக வெல்லும்” - செங்கோட்டையன் நம்பிக்கை