விவசாயம் மற்றும் சூழலியல் ஆர்வத்தை மாணவர்கள் மனதில் விதைக்கும் விதமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் தமிழகத்திலேயே முதல் முறையாக பசுமைப் பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் காய்கறிகள், மூலிகை செடிகள் வளர்ப்பில் மாணவர்கள் ஈடுப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பசுமைப் பள்ளித்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். மாணவர்கள் விவசாயம் குறிந்து தெரிந்து கொண்டு பயிற்சி மேற்கொள்ளவும் மற்றும் சூழலியல் பின்பற்றுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பசுமைப் பள்ளித்திட்டம் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என முதல்வர் கூறியிருந்தார்.
அதன்படி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழகத்திலேயே முதன்முறையாக பசுமைப்பள்ளி திட்டம் அமைக்கப்பட்டது. சுமார் ரூ 20 லட்சம் மதிப்பில் செயல்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ எட்டரை லட்சத்தில் அப்பள்ளியில் பசுமை பள்ளித்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்துள்ளார்.

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி. கலைவாணன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ், தொழிற்கல்வி இணை இயக்குநர் ஜெயக்குமார், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷெர்பின் அருளிடம் பேசினோம், ''கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 526 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 11 மற்றும் 12ம் வகுப்பில் வேளாண் பிரிவில் மட்டும் 40 மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததன்படி எங்க பள்ளியில் பசுமைப் பள்ளித்திட்டம் அமைக்கப்பட்டது.

25 சென்டில் குளிர்காலங்களில் தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பாலி ஹவுஸ் மற்றும் கோடை காலங்களில் தாவரங்களுக்கு பாதிப்பை உண்டாக்காத கிரீன் ஹவுஸ் அமைக்கப்பட்டது. இவற்றில் காய்கறி தோட்டம், மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், ஆடாதொடை, துளசி, கீழாநெல்லி போன்ற மூலிகை செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
பத்து சென்டில் வேறு பயிர்கள் பயிரிடுவது, அதில் தண்ணீர் சிக்கனம் கடைபிடிப்பதன் அவசியம் ஆகியவற்றிற்காக சொட்டு நீர்பாசனம், சுழற்ச்சி முறை நீர்பாசனம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. மேலும் பத்து சென்டில் விவசாயத்தில் என்னென்ன பாசன முறைகள் பின்பற்றப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பாசன முறைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சென்டில் குட்டை அமைத்து அதில் கெண்டை மீன்கள் வளர்க்கப்படுகின்றன. நெகிழி இல்லாத பள்ளி வளாகமாக இருக்க வேண்டும் என்பதே இதில் முத்தாய்ப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்காக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் போடுவதற்காக தனி தனியே தொட்டிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படு வருகின்றன. சூரியஒளி மின்சாரம் பெறுவதற்கான கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசுப்பள்ளி மாணவர்களிடையே பசுமைப்பள்ளி திட்டம் விவசாயம் மற்றும் சூழலியல் ஆர்வத்தை விதைக்கும். குறிப்பாக எங்க பள்ளி வேளாண் பிரிவு மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக பசுமைப் பள்ளித்திட்டம் கிடைத்திருக்கிறது. மாணவர்கள் விளைவிக்க கூடிய காய்கறிகள் பள்ளியில் சத்துணவிற்கு பயன்படுத்தப்படும்.

மாணவர்கள் விவசாய செயல்முறைகளை செய்து தெரிந்து கொள்கின்ற ஆய்வகமாகவும் இது திகழ்கிறது. மாணர்வர்கள் ஆர்வமாக காய்கறி, மூலிகை செடிகளை பராமரித்து வருகின்றனர். எங்க பள்ளியின் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் விவசாயம் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
மேலும் படிக்க பசுமைப் பள்ளித் திட்டம்: காய்கறி, மூலிகை, மீன் வளர்ப்பு அசத்தும் திருவாரூர் அரசுப்பள்ளி மாணவர்கள்!