ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே நசியனூர், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அர்ஜுனன், நசியனூர் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் கோவேந்திரன். இவர் சித்தோடு பேரூராட்சியில் 1-ஆவது வார்டின் தி.மு.க. கவுன்சிலராக இருக்கிறார். அர்ஜுனனின் ஹோட்டலுக்கு அருகே இவரும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக மின் விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. சனிக்கிழமை அர்ஜுனனுக்கு சொந்தமான நாய் ஒன்று கோவேந்திரனின் ஹோட்டலுக்கு முன் சிறுநீர் கழித்து விட்டதாகத் தெரிகிறது. அந்த நாயை கோவேந்திரன் தாக்கியதாகத் தெரிகிறது. இதை கண்ட அர்ஜுனன் வாயில்லா ஜீவனை போட்டு அடிக்கிறாயே என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் இரவில் வியாபாரம் முடித்ததும், ஹோட்டலை மூடி விட்டு அர்ஜுனன் வீட்டுக்குச் சென்று விட்டார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அர்ஜுனனின் உணவகம் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் உணவகத்தின் மீது
பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி விட்டு எஸ்கேப் ஆனார். இந்த காட்சிகள் அனைத்தும் ஹோட்டல் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது. பெட்ரோல் குண்டு வீசியதும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்தோடு போலீஸாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 30 நிமிடம் போராடி தீயணைத்தனர். எனினும் கடையின் முன் பகுதியில் இருந்த 2 குளிர்சாதன பெட்டிகள், பெஞ்ச், டேபிள்கள், பெயர் பலகை போன்றவை சேதமானது.

நிகழ்விடத்துக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கடையின் முன்பு பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அதில் பதிவாகியிருந்த மர்ம நபரின் முகம் தெளிவாக தெரிகிறது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீசியதில் தி.மு.க. கவுன்சிலர் கோவேந்திரனுக்கு தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவேந்திரன், தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனனுக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் போட்டியால் இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க ஈரோடு: ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு; பேரூராட்சி கவுன்சிலருக்கு தொடர்பா?!