மெட்டா (ஃபேஸ்புக்), ட்விட்டர், ஆப்பிள், அமேசான் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 11,000 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியிருக்கிறது. அமெரிக்காவில் பொருளாதார சுணக்கம் தீவிரமடையத் தொடங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகள்தான் இந்த வேலைநீக்க நடவடிக்கைகள் என்று கருதலாம். ‘அடுத்து வரும் ஒன்றிரண்டு காலாண்டுகளுக்கு இது மாதிரி செய்திகள் வருவதைத் தவிர்க்க முடியாது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது நமக்கு பகீரென்றுதான் இருக்கிறது.
அமெரிக்காவில் உருவாகிவரும் பொருளாதார சுணக்கத்தால், ‘நம் நாட்டில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது’ என்றுதான் பல நிபுணர்கள் சொல்லி வந்தனர். ஆனால், அமெரிக்கப் பெரும் நிறுவனங்கள் இப்போது செய்யும் வேலைநீக்க நடவடிக்கைகளைப் பார்த்தால், நம் நாட்டில் எத்தகைய பாதிப்பு ஏற்படுமோ என்கிற பயம் நம் மக்களிடம் உருவாகியிருக்கிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம் காரணமாக நம் நாட்டில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க மத்திய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது, அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பது குறித்து சிந்தித்து, அதற்கான திட்டத்தைத் தயாராக வைத்திருக்க வேண்டிய நேரம் இது. 2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் ‘சப்-பிரைம்’ நெருக்கடி ஏற்பட்டது. அதனால், நம் நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதபடிக்குப் பல்வேறு நடவடிக்கைகளை 2009 பட்ஜெட்டில் அறிவித்தார், அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி. அது மாதிரி ‘தீர்க்க தரிசனம்’ பொருந்திய அணுகுமுறையும், நடவடிக்கைகளும் மத்திய அரசிடம் இப்போது இருப்பது அவசியம்!
நம் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களும் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும்முன், அடுத்த சில மாதங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு என்பது குறித்து யோசிப்பது அவசியம். குறிப்பாக, அமெரிக்காவுடன் நேரடித் தொடர்புகொண்டிருக்கும் வணிக நிறுவனங்கள் இந்தக் கோணத்தில் சிந்திக்காமல் இருக்க முடியாது. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆராய்வது நல்லது.
இந்த சமயத்தில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. காரணம், நமது பங்குச் சந்தையின் செயல்பாடானது, அமெரிக்க பங்குச் சந்தையின் செயல்பாட்டையொட்டியே அமையும். நம் பொருளாதாரம் உறுதியாக இருந்தாலும், அமெரிக்கப் பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு, குறுகிய கால முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.
இப்போதைய நிலையில், மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது என்று நாம் பயந்து நடுங்கத் தேவையில்லை. அதே சமயம், நமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது என்று அஜாக்கிரதையாகவும் இருக்கத் தேவை இல்லை. எது நடந்தாலும் சமாளிப்பது எப்படி என்கிற தயார் நிலைத் திட்டத்துடன் இருந்தால், நாம் எதற்காகவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!
- ஆசிரியர்
மேலும் படிக்க அமெரிக்கப் பொருளாதார சுணக்கம்... நாம் செய்ய வேண்டியது என்ன?