Doctor Vikatan: எனக்கு பற்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். உப்புத்தூளால் பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறும் என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்டு தொடர்ந்து ஒரு வாரம் அப்படிச் செய்தேன். இப்போது பற்களில் கூச்சம் அதிகமாகிவிட்டது. புண்ணாகிவிட்டது. இதற்கு என்ன தீர்வு? மஞ்சள் பற்களை வெள்ளையாக்க என்ன வழி?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி

பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதுதான் உங்களுக்குப் பிரச்னையாக இருப்பதாகத் தெரிகிறது. உண்மையில் எல்லோருக்கும் பற்கள் வெள்ளைவெளேர் என இருக்கும், அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள்.
பற்களின் நிறங்களில் பல ஷேடுகள் உள்ளன. லேசான மஞ்சள் நிறம் முதல் வெள்ளை நிறம் வரை அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். யாரோ சொன்னதன் பேரில் உப்பு வைத்துப் பல் துலக்கியதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அது கல் உப்பா, பொடி உப்பா தெரியாது.
எந்த உப்பானாலும் அதை வைத்துப் பல் துலக்கும்போது ஈறுகள் பாதிக்கப்படும். ஈறுகளில் உள்ள மென்மையான திசுக்கள் பாதிக்கப்பட்டு புண்ணாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல உப்பால் பல் தேய்ப்பதன் விளைவாக பற்களின் மேல் உள்ள எனாமல் போய்விடும்.
உங்களுடைய பற்கள் மஞ்சள் நிறத்திலிருக்க என்ன காரணம் என்பதை முதலில் பார்க்க வேண்டும். அவை இயல்பிலேயே மஞ்சள் ஷேடில்தான் இருக்கின்றனவா, புகையிலை உள்ளிட்ட ஏதோ ஒன்றால் கறைபடிந்து மஞ்சள் நிறமாக மாறி உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

அப்படி கறை படிந்ததால் மாறியிருக்கும் பட்சத்தில் பற்களை க்ளீன் செய்தாலே அவற்றின் நிறம் மாறிவிடும். ரொம்பவும் ஆழமான கறையாக இருந்தால் பல் மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் உங்களுக்குத் தேவைப்படும் சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள்.
செயற்கையாக மஞ்சள் நிறமாக மாறிய பற்களை வெள்ளையாக்க இன்று பல சிகிச்சைகள் உள்ளன. கவலை வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: உப்பு வைத்து பல் துலக்கினால் பற்களின் மஞ்சள் நிறம் மாறுமா?