Doctor Vikatan: முன்பெல்லாம் ஆண்களுக்குத்தான் அதிக அளவில் ஹார்ட அட்டாக் வரும். பெண்களில் அதிக அளவில் மாரடைப்பால் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இன்று பெண்களுக்கும் மாரடைப்பு அதிகம் வருவது ஏன்? 'நேத்துவரை நல்லாதான் இருந்தாங்க... இன்னிக்கு திடீர்னு இறந்துட்டாங்க...' என ஆரோக்கியமான நபர், ஹார்ட் அட்டாக்கில் உயிரிழப்பது பற்றியும் அதிகம் கேள்விப்படுகிறோம். நன்றாக இருக்கும் நபருக்கு இப்படி திடீரென மாரடைப்பு வருமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் முகமது இத்ரீஸ்.

இதய நோய் பாதிப்புக்கான ரிஸ்க்கை கணக்கிட யூரோ ஸ்கோர் (EuroSCORE) என ஒன்று உண்டு. யாருக்கெல்லாம் ரிஸ்க் அதிகம் என்பதைச் சொல்லும் அது, பெண்களாக இருந்தாலே ரிஸ்க் சற்று அதிகம் என்கிறது. காரணம், அவர்களின் ரத்தக்குழாய் சுருங்கியிருப்பது. பெண்களின் ரத்தக்குழாய்கள், ஆண்களின் ரத்தக்குழாய்களைவிட சிறியதாக இருப்பதால் பெண்களுக்கு மாரடைப்பு வரும் ரிஸ்க் அதிகம் என்பதுதான் இதன் அர்த்தம். அது தவிர மெனோபாஸுக்கு பிறகு ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களும் பெண்களுக்கு மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கின்றன.
நீங்கள் சொல்வது போல அந்தக் காலத்துப் பெண்களுக்கு மாரடைப்பே வந்ததில்லை என அர்த்தமில்லை. அவர்களுக்கும் வந்திருக்கும், மாரடைப்பால் இறந்திருப்பார்கள். ஆனால் அந்தக் காலத்துப் பெண்களுக்கு அறிகுறிகளே தெரியாமல் போயிருக்கலாம். அவர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்திருக்கலாம். இன்றைய பெண்கள் வேலைக்குப் போகிறார்கள், விழிப்புணர்வு இருக்கிறது. அறிகுறிகளையும் உணர்கிறார்கள். அதனால் பெண்களின் பல பிரச்னைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. எனவே மாரடைப்புக்கு ஆண், பெண் பேதமெல்லாம் கிடையாது.
`நேற்றுவரை நல்லாதான் இருந்தாங்க... திடீர்னு இறந்துட்டாங்க' என்ற ஆதங்கத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்ட அந்த நபரின் ஆரோக்கியம் கேள்விக்குரியது. ஆரோக்கியமானவர் என நாம் நினைத்துக்கொண்டிருந்த அந்த நபர், பெரிய உடலியக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்த்திருக்கலாம். திடீரென நெஞ்சுவலி வந்திருக்கும், டெஸ்ட் செய்தால் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வரும். ஒருவேளை அவர் அறிகுறிகளை உணராத நிலையில், அடைப்பும் அதிகமானதால் திடீரென இறந்திருப்பார்.
இதயத்தில் அடைப்பு இருக்கும்பட்சத்தில் அது 30-50 சதவிகிதம் வரை இருக்கும்போது அறிகுறிகளை பெரிதாகக் காட்டாது. இதயத்துக்கு வேலை கொடுக்கும்படியான வேலைகள் செய்யும்போதுதான் நெஞ்சுவலியை உணர்வார்கள். டெஸ்ட் செய்து பார்த்தால் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியும். டெஸ்ட் செய்யாதவர்களுக்கு அதுவும் தெரியாது. அந்த அடைப்பு 80 சதவிகிமாகும்போதுதான் அறிகுறிகளை உணர்வார்கள்.

அதனால்தான் குறிப்பிட்ட வயதுக்கு மேலானவர்களும், குடும்ப பின்னணியில் இதய நோய்கள் இருப்பவர்களும், இணைநோய்கள் உள்ளவர்களும், புகை, மதுப் பழக்கங்கள் இருப்பவர்களும் வாழ்வியல் முறையில் கவனமாக இருக்கவும், புகை, மதுப் பழக்கங்களைக் கைவிடுமாறும், வருடாந்தர உடல் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: ஆரோக்கியமான நபர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வருமா?