Doctor Vikatan: சில வகை உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்துவது ஏன்? அந்த உணவுகளை எப்படித் தெரிந்துகொள்வது? வயிற்று உப்புசத்துக்கு உணவுகள்தான் காரணமா அல்லது வேறு பிரச்னைகளால் அப்படி ஏற்படுகிறதா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

பிஸ்கட், பிரட், நான், குல்ச்சா, பரோட்டா போன்று மைதா சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நிறைய நேரம் எடுக்கும். அதனால் இவற்றைச் சாப்பிட்டதும் வயிறு கனத்தது போல ஓர் உணர்வு ஏற்படும். அந்த உணர்வைப் போக்க உடனே சோடா குடிப்பார்கள். சோடா குடித்து ஏப்பம் வந்ததும், வயிறு லேசானது போல உணர்வார்கள். எனவே, மைதா உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம்.
புராசெஸ்டு உணவுகள், அல்ட்ரா புராசெஸ்டு உணவுகள் என இருவகை உள்ளன. அரிசியை பாலிஷ் செய்து வெள்ளையாக மாற்றுவது புராசெஸ்டு வகையில் வரும். அதே அரிசியில் நிறமிகள், இனிப்பு, செயற்கை சுவையூட்டிகள், ப்ரிசர்வேட்டிவ் எல்லாம் சேர்த்து பிஸ்கட்டாகவோ, வேறு உணவாகவோ மாற்றுவது அல்ட்ரா புராசெஸ்டு வகையில் வரும். அல்ட்ரா புராசெஸ்டு உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம்.
சில உணவுகளில் ஃப்ரூட் சால்ட் எனப்படும் உப்பு சேர்ப்பார்கள். உதாரணத்துக்கு வீட்டில் ரவா இட்லியோ, ரவா தோசையோ தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கான பொருள்களைச் சேர்த்து சில மணி நேரம் ஊற வைத்துப் பிறகுதான் செய்வோம். அதுவே நேரமின்மை காரணமாகச் சிலர் இன்ஸ்டன்ட் மிக்ஸை கடைகளில் வாங்கிச் செய்வார்கள். அதில் சோடா பை கார்பனேட் சேர்க்கப்பட்டிருக்கும். அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.
சிலருக்கு பால்கூட வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். சிலர் நாள் முழுவதும் நிறைய பால் குடித்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இருக்காது. சிலர் காபிக்காக சிறிது பால் சேர்த்துக் குடித்தாலும் வயிற்று உப்புசம் வரும். அது நம் செரிமான சக்தியைப் பொறுத்தது.
சிலருக்கு என்ன உணவு சாப்பிட்டாலும் செரிக்கும். வேறு சிலருக்கு அதற்கு நேரெதிராக இருக்கும். பால் குடித்திருப்பார்கள். அதே நாளில் மில்க் ஸ்வீட் சாப்பிட்டிருப்பார்கள். அளவு அதிகரிக்கும்போது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம்.
என்னவெல்லாம் சாப்பிடும்போது அப்படி ஏற்படுகிறது என்று தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம்தான் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும் உணவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். நீர்மோர் குடிப்பது, புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் சாப்பிடுவது, திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் உங்கள் உடல் லேசாக இருப்பதை உணரலாம்.

சிலர், கண்ட நேரத்துக்கு கண்டதையும் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எளிதில் செரித்துவிடும். வேறு சிலருக்கு அப்படி இருக்காது. அதேபோலதான் சில உணவுகளைச் சாப்பிடும்போது சிலருக்கு உடல்எடை கூடும். இன்னும் சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எடை கூடாது. வயிற்று உப்புசமும் அப்படித்தான். மைதா மற்றும் அல்ட்ரா புராசெஸ்டு உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் வருவது இயல்புதான். சோடா, ஈஸ்ட் உள்ளிட்டவை சேர்த்த உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் அதிகரிக்கும்.
ராஜ்மா, கொண்டைக்கடலை மாதிரியான கடலை வகைகள், பால் போன்றவை வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கும் வயிற்று உப்புசம் அதிகமிருக்கும். புளித்த ஏப்பம், எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் போன்றவையும் வரலாம். அடிக்கடி இன்ஸ்டன்ட் உணவுகள் சாப்பிடும்போது இப்படி ஏற்பட்டால் அந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: சில உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் வருவது ஏன்?