Doctor Vikatan: கடந்த 2020- ம் வருடம், 6வது மாதம் இரு சக்கர வாகன சாலை விபத்தில் சிக்கிய எனக்கு, ஸ்டேஜ் 1 என்ற தலைக்காயம் ஏற்பட்டது. அதையடுத்து சுமாராக 3 மாதங்களுக்கு சுயநினைவிழந்த நிலையில் இருந்தேன். பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்றவற்றின் மூலம் மீண்ட எனக்கு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை நாள்கள் ஆகும்?
- Vevaigai Suresh, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மற்றும் வலிப்புநோய் சிறப்பு மருத்துவர் அருண்குமார்

தலையில் ஏற்படும் காயங்களை பொதுவாக கிரேடு 1, கிரேடு 2, கிரேடு 3 என மூன்றாகப் பிரிக்கலாம். மைல்டானது, மிதமானது, தீவிரமானது என அர்த்தம்.
காயத்தை எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்தால் கிரேடு 1-ல் சாதாரணமாக இருக்கும். கிரேடு 2-ல் சாதாரணமாகவோ, ஓரளவு அசாதாரணமாகவோ இருக்கும். கிரேடு 3-ல் அசாதாரணமாக மட்டுமே இருக்கும். கிரேடு 1-ல் நினைவிழப்பு 30 நிமிடங்களை விட குறைவாக இருக்கும். கிரேடு 2-ல் 30 நிமிடங்கள் முதல் 24 மணி நேரம் வரை இருக்கும். கிரேடு -3ல், 24 மணி நேரத்துக்கும் அதிகமாக இருக்கும்.
அம்னீஷியா எனப்படும் மறதி பாதிப்பு, கிரேடு 1-ல் 24 மணி நேரத்துக்கும் குறைவாக இருக்கலாம். கிரேடு -2-ல் 7 நாள்கள்வரை அது தொடரலாம். கிரேடு -3-ல் அதைவிட அதிகமாக நீடிக்கும். இது பொதுவான அளவுகோல்.
நம்முடைய சுயநினைவுக்கான அளவுகோலை 'ஜிசிஎஸ்' ( The Glasgow Coma Scale -GCS) என்று சொல்வோம். ஒருவர் எத்தனை நாள்கள் நினைவின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பது இது. நம்முடைய சுயநினைவின் அளவானது 15 என்ற நிலையில், தலையில் அடிபட்டு, அது மைனர் பாதிப்பாக இருக்கும்போது இந்த அளவானது13 முதல் 15- ஆக இருக்கும். மிதமான பாதிப்பு என்றால் 9 முதல் 12 ஆகவும், தீவிர பாதிப்பில் அது 9-ஐவிடக் குறைவாகவும் இருக்கும்.
உங்களுடைய விஷயத்தில் நீங்கள் 3 மாதங்கள் அம்னீஷியாவில் இருந்தது தெரிகிறது. எனவே உங்களுக்கு ஏற்பட்டது தீவிர பாதிப்பு. மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேனில் ஏதேனும் அசாதாரணம் இருந்திருக்க வாய்ப்புண்டு. தீவிர பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
உங்களுக்கு பிசியோதெரபி உள்ளிட்ட பிற சிகிச்சைகள் கொடுக்கப்பட்ட பிறகு தற்போதைய நிலை என்ன என்பது தெரிய வேண்டும். தீவிர பாதிப்புக்குள்ளான நிலையில் முழுமையான நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அது நபருக்கு நபர் வேறுபடும்.

நினைவு திரும்புவது என்பது 3 மாதங்களில் தொடங்கி ஒரு வருடம் வரை படிப்படியாக நிகழலாம். 3 மாதங்களில் நினைவு திரும்பவில்லை என்றால் அடுத்தடுத்து அதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டேதான் போகும்.பெரும்பாலான நோயாளிகளுக்கு இப்படித்தான் ஆகும். அந்தக் காலகட்டத்தைத் தாண்டிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். அதன் பிறகு நினைவு திரும்புவதெல்லாம் மெடிக்கல் மிராக்கிளாகவே பார்க்கப்படும்.
உங்களுக்கு இப்போது முறையான பிசியோதெரபி, ஸ்டிமுலேஷன் தெரபி போன்றவை கொடுக்கப்படுகின்றனவா என்று தெரியவில்லை. உறவினர்கள், நண்பர்கள் உங்களுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளி என்றால் படுக்கைப் புண்கள், அதனால் இன்ஃபெக்ஷன் போன்றவை வராமலிருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டால் ஓரளவு தேறி வர வாய்ப்புண்டு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: விபத்தில் ஏற்பட்ட தலைக்காயம்... இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை நாள்கள் ஆகும்?