Doctor Vikatan: என் வயது 26. தலையில் பொடுகு அதிகமிருக்கிறது. முடியும் அதிகமாக உதிர்கிறது. இது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத் தடுக்க எளிய வீட்டு சிகிச்சை இருந்தால் சொல்லவும்.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பிரச்னைகளுக்குமே கூந்தலை சரியாகப் பராமரிக்காததுதான் காரணம். தினமும் தலைக்குக் குளிப்பதுதான் ஆரோக்கியமானது. நம்மைச் சுற்றிலுமுள்ள சூழல் மாசு காரணமாக மண்டைப்பகுதியில் சீக்கிரம் அழுக்கும் தூசும் படியும். அதை சுத்தப்படுத்த தினமும் தலைக்குக் குளிப்பது அவசியமாகிறது.
தவிர வேலைச்சுமை, டென்ஷன், வாழ்க்கைமுறை என பல காரணங்களால் மண்டைப்பகுதியில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும். அதன் காரணமாக மண்டைப்பகுதியில் உள்ள துவாரங்கள் அடைத்துக் கொள்ளும். இதன் காரணமாக பொடுகு சேரும், முடி உதிர்வும் அதிகரிக்கும்.
தினமும் காலையில் தலைக்குக் குளிக்க நேரமில்லாதவர்கள், மாலையிலாவது குளிக்கலாம். மருந்துக் கடைகளில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில், கேப்ஸயூல் வடிவில் கிடைக்கும். 50 மில்லி தேங்காய்ப் பாலில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூலில் மூன்றை உடைத்துச் சேர்க்கவும். நாட்டு மருந்துக் கடைகளில் பொடுதலைப் பொடி, வில்வப் பொடி கிடைக்கும். இவற்றில் தலா 1 டீஸ்பூன் சேர்த்துக் கலவையில் கலந்து கொள்ளவும்.

முதல்நாள் இரவு தலைக்கு எண்ணெய் வைத்து, மறுநாள் இந்தக் கலவையைத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். காலையில் எண்ணெய் வைத்து அதன் மேல் கலவையைத் தடவி, ஊறியும் குளிக்கலாம். மைல்டான ஷாம்பூ பயன்படுத்தவும். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்து வந்தாலே உங்கள் பிரச்னை சரியாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: நாளுக்குநாள் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு... எளிய தீர்வுகள் உண்டா?