`எனக்கு மழையில் நனைந்தபடி நடப்பது பிடிக்கும். அப்போதுதான் மற்றவர்களால் நான் அழுவதைப் பார்க்க முடியாது.’ - புகழ்பெற்ற பொன்மொழி
அந்தச் சிறுவனைப் பார்த்தாலே சக மாணவர்கள் தள்ளிப்போனார்கள். `ஐயய்யே... என்னடா இவன் இப்பிடி இருக்கான்... ஆளும், மண்டையும், கண்ணும், மூக்கும்...’ என்று அருவருப்போடு பார்த்தார்கள். அவர்கள், அந்தச் சிறுவனுக்கு வைத்த பெயர் `ஏலியன்.’ அதாவது, `வேற்றுக்கிரகவாசி.’ இல்லையில்லை... `வேற்றுகிரக ஜந்து.’ பிறரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகும்போதெல்லாம் அந்தப் பையன் கூனிக்குறுகிப்போனான். நண்பன் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. தனிமை மேலும் தன்னிரக்கத்தில் ஆழ்த்தியது; தாழ்வு மனப்பான்மையைக் கொண்டு வந்து சேர்த்தது.

அந்தச் சிறுவனின் பெயர் ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson). இங்கிலாந்திலிருக்கும் கான்செட் (Consett) என்ற சிறு நகரில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா விவசாயி. ரோவன் அட்கின்சனுக்கு மூன்று அண்ணன்கள். ஆரம்பத்தில் துர்ஹாமில் (Durham) இருந்த கோரியஸ்டர் பள்ளியில் படித்தவர், பிறகு செயின்ட் பீஸ் ஸ்கூலில் (St. Bees School) சேர்ந்து படித்தார். தனிமையும் வெறுமையும் துரத்த, அறிவியல் பாடத்தில் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்தார். சதா அறிவியல் பாடத்தைக் கட்டிக்கொண்டு அழும் மகனை ஆச்சர்யத்தோடு பார்த்தார் அப்பா எரிக். கூடவே, நண்பர்கள் என்று யாரும் அவனைத் தேடி யாரும் வராததும், அவனும் நண்பர்களைத் தேடிப் போகாததும் உறைத்தது. ஒருநாள் மகன் படிக்கும் பள்ளிக்குப் போனார். அவனுடைய ஆசிரியர்களிடம் விசாரித்தார். ``என் பையன் எப்போ பார்த்தாலும் சயின்ஸ் புக்கை எடுத்துப் படிச்சுக்கிட்டு இருக்கான். அவன் சயின்ஸ்ல பெரிய ஆளா வருவான்ல?’’ என்று கேட்டார்.
ஆசிரியர்களில் ஒருவர் சொன்னார்... ``நீங்க வேற அவன்கிட்ட சொல்லிக்கிற மாதிரி பிரமாதமான திறமை ஒண்ணும் கிடையாது. அவன் பெரிய விஞ்ஞானியா வருவான்னு எல்லாம் நான் நினைக்கலை.’’
அட்கின்சனுக்கு, அவர்மீது பிறருக்கு இருந்த அவநம்பிக்கையை உடைத்துக் காட்ட வேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தது அந்தக் கணத்தில்தான். `முதல்ல படிப்பை ஒழுங்காப் படிப்போம்’ என்று முடிவெடுத்தார். படித்தார். அறிவியல் பாடங்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, `ஏ லெவல்’ கிரேடோடு வெளியே வந்தார். வடகிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் `நியூகேஸ்ட்டில் யூனிவர்சிட்டி’யில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் படிப்பு. அந்தப் படிப்பை முடித்ததும், அவர் அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களுக்காகவே ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டியின் `தி குயின்’ஸ் காலேஜில்’ மேற்படிப்புப் படிக்க இடம் கிடைத்தது. ஒரு பக்கம் படிப்பில் கவனம் செலுத்தினாலும், நடிப்புக்கலை அவரை `வா... வா...’ என்று அழைத்துக்கொண்டே இருந்தது. குயின்’ஸ் காலேஜில் அந்த ஆசை அதிகமானது.

ஒருநாள் கல்லூரியில் இயங்கும் நாடகக்குழுவினரைப் போய்ப் பார்த்தார். ``எனக்கும் நாடகத்துல நடிக்க ஒரு சான்ஸ் குடுங்களேன்’’ என்று வாய்விட்டுக் கேட்டார்.
நாடகக்குழுவின் தலைவராக இருந்த மாணவர் அட்கின்சனை ஏற இறங்கப் பார்த்தார். `இந்த முகத்தையும் உடம்பையும் வெச்சுக்கிட்டு நடிக்கணும்கிறானே...’ என்று அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும், ஒருவரின் ஆர்வத்துக்கு அணைபோடக் கூடாது அல்லவா... அவர் ஒரு பேப்பரை எடுத்து அட்கின்சனிடம் நீட்டினார். ``எங்கே... இந்த வசனத்தைப் படிச்சுக் காட்டு.’’
அட்கின்சன் பேப்பரை வாங்கினார். படிக்க ஆரம்பித்தார். அவரால் இரண்டு, மூன்று வரிகளைக்கூட ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. நாக்குக் குழறியது. வார்த்தைகள் திக்கித் திக்கி வந்தன. நாடகக்குழுத் தலைவர் பேப்பரை வாங்கிக்கொண்டார். ``இப்பிடி மேடையில போய்ப் பேசினா யாரு பார்ப்பாங்க... சொல்லு!’’ அட்கின்சன், தலைகுனிந்தபடி அங்கிருந்து வெளியேறினார்.

நிரகாரிப்பின் வலியை முழுமையாக உணர்ந்தார். `ஏன்... இந்த முகத்தையும் உடம்பையும் வெச்சுக்கிட்டு நடிக்க முடியாதா... யாரும் பார்க்க மாட்டாங்களா... பார்க்கவெப்பேன்’ என்ற உறுதி உள்ளுக்குள் பிறந்தது. ரோவன் அட்கின்சனின் வாழ்க்கைக்குறிப்பில், அவர் ஆக்ஸ்ஃபோர்டில் இருக்கும் ஒரு காமெடி குரூப்பில் எப்படியோ இடம்பிடித்தது, `எடின்பர்க் ஃபெஸ்டிவ் ஃபிரின்ஞ்’ என்ற கலைவிழாவில் கலந்துகொண்டு, காமெடியில் கலக்கி தேசிய அளவில் கவனம் பெற்றதெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. மற்றவர்களை சிரிக்கவைப்பது அவருக்குப் பிடித்திருந்தது. அதற்கு அவருடைய உடல்மொழி கைகொடுத்தது. நகைச்சுவைதான் தனக்கான இடம் என்பதை ஒருகட்டத்தில் உணர்ந்துகொண்டார். காமெடியில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அந்தச் சமயத்தில்தான் எழுத்தாளரும், இயக்குநருமான ரிச்சர்டு கர்ட்டிஸின் அறிமுகமும் நட்பும் அவருக்குக் கிடைத்தன. அட்கின்சனின் நடிப்புப் பயணத்தில் ரிச்சர்டு கர்ட்டிஸுக்கு முக்கியமான பங்கு உண்டு.
கல்லூரியில் பட்டம் பிடித்த பிறகு, எத்தனையோ தொலைக்காட்சி நிலையங்களின் படிகளில் ஏறி, இறங்கினார். தயாரிப்பாளர்கள் அதே பழைய பல்லவியையே பாடினார்கள். `திக்கித் திக்கிப் பேசுறீங்க... இது சரிவராது’, `உங்களுக்கு நடிகருக்கான முகவெட்டு இல்லை’, `மூக்கு துருத்திக்கிட்டுத் தெரியுதே... ஆடியன்ஸ் எப்பிடி உங்களை நடிகரா ஏத்துப்பாங்க?’ போகிற இடங்களிலெல்லாம் நிராகரிப்பு. ஆனால், அந்த நிராகரிப்புதான் `நாம சாதிக்க ஏதோ இருக்குடா’ என்கிற நினைப்பை அவருக்குள் விதைத்தது. டி.வி-யில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், ரேடியோவில் கிடைத்தது. பிபிசி-3 ரேடியோவில் `தி அட்கின்சன் பியூப்பிள்’ என்ற நகைச்சுவைத் தொடரை ஆரம்பித்தார். அவரே நடித்தார். `யாருப்பா இந்த ஆளு?’ என அந்த நிகழ்ச்சியைக் கேட்டவர்கள் தேட ஆரம்பித்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒன்று புரிந்தது. ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அவருக்குப் பேச்சு சரளமாக வந்தது; வார்த்தைகள் திக்கல், திணறல் இல்லாமல் வெளிவந்தன.

கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்ற ஆரம்பித்தார். அவர் நடித்த அத்தனை சீரியல்களும் கவனம் பெற்றன. நண்பர் ராபர்ட் கர்ட்டிஸுடன் இணைந்து அவர் எழுதிய வரலாற்று காமெடி தொடரான `பிளாக்கேடர்’ (Blackadder) பிரமாதமான வெற்றி. பிறகென்ன `பிளாக்கேடர் - 2’, `பிளாக்கேடர் - 3’ எனத் தொடர் வெற்றி. ரொம்ப நாள்களாகவே வசனம் எதையும் பேசாமல், திரையில் தோன்றி நடித்து பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அட்கின்சனுக்கு இருந்தது. அவரும் ராபர்ட் கர்ட்டிஸும் இணைந்து அந்தப் பாத்திரத்தை உருவாக்கினார்கள். அதற்குப் பெயர் `மிஸ்டர் பீன்.’ முதலில் அதற்கு வைக்கப்பட்ட பெயர் `மிஸ்டர் வொயிட்.’ நகைச்சுவையாகப் பெயர் அமைய வேண்டும் என்று விரும்பினார் அட்கின்சன். காய்கறிப் பெயரை வைக்கலாமே என்று யோசனை தோன்றியது. `மிஸ்டர் காலிஃபிளவர்’ என்றெல்லாம் வைத்துப் பார்த்தார்கள். ஒன்றும் செட்டாகவில்லை. கடைசியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது, `மிஸ்டர் பீன்.’ பின்னாளில் ரோவன் அட்கின்ஸனைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் `மிஸ்டர் பீன்’ என்று அழைக்கும் அளவுக்கு அந்தப் பெயர் பிரபலமானது.
இன்றைக்கு, `மிஸ்டர் பீன்’ உலக சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத கதாபாத்திரம். பெரிய திரையில் அட்கின்சன் முதலில் தோன்றியது, `நெவர் சே நெவர் எகெய்ன்’ என்ற படத்தில். சின்ன ரோல்தான். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்திருக்கிறோம் என்கிற பெருமிதமும் உற்சாகமும் தொடர்ந்து அவரை இயங்கவைத்தன.

1979-ல் ஆரம்பித்த அவருடைய நடிப்புப் பயணம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும், அவருக்குத் தனி அடையாளம் தந்தது `மிஸ்ட பீன்’தான். ஒரு வளர்ந்த மனிதரின் குழந்தைத்தனமான செய்கைகளும், நடத்தையும் பார்ப்பவர்களைக் கட்டிப்போட்டன. `உடலில் வலுவில்லை, பேசும்போது நாக்கை நாக்கை நீட்டுகிறார், நேராகப் பார்க்காமல் எப்படியெப்படியோ பார்க்கிறார்’ என எந்தக் காரணங்களுக்காகவெல்லாம் அவர் நிராகரிக்கப்பட்டாரோ, அவற்றைத்தான் பார்வையாளர்கள் திரும்பத் திரும்ப ரசித்தார்கள். ரசிக்கவைத்தார் அட்கின்சன்.

தொலைக்காட்சித் தொடர்களில், அனிமேஷன் படங்களில், சினிமாவில் என ஏராளமாக `மிஸ்டர் பீன்’ வலம் வந்துவிட்டார். அத்தனையிலும் அவரைப் பார்த்து மனிதர்கள் தங்களை மறந்து சிரித்தார்கள்; ரசித்தார்கள்; ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். உருவ கேலியோ, கிண்டலோ ஒருவரின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது என்பதற்கு வாழும் உதாரணம் ரோவன் அட்கின்சன்.
மேலும் படிக்க Motivation Story: `மிஸ்டர் பீன்’ என்ற பெயர் ஏன்? யாரிந்த இந்த பீன்; ஒரு சாதனையாளனின் கதை!