ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் உமையலிங்கம். இவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அவரின் மனைவி மனிஷாவுடன் வசித்து வருகிறார். இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள சாய்லிங்கா ஆலயத்தில் பூசாரியாக இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு 9 மணிக்கு கோயிலில் பூஜையை முடித்து விட்டு, உமையலிங்கமும், அவரின் நண்பரான கோமதிராஜூவும் மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பூசாரி உமையலிங்கத்தை வழி மறித்தனர். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. காரிலிருந்து இறங்கிய 5 பேருடன், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என 6 பேர் சேர்த்து உமையலிங்கம், கோமதிராஜ் ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். கோமதிராஜை துரத்தி விட்டுவிட்டு, உமையலிங்கத்தின் கை, கால்களை கட்டி காரின் பின் இருக்கையில் அமர வைத்துக் கொண்டு கடத்திச் சென்றனர்.
உமையலிங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தை கோமதிராஜ் அவரின் மனைவி மனிஷாவிடம் கூறினார். அவர் கணவர் கடத்தப்பட்டது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிகண்ணன் ஆகியோரின் தலைமையிலான போலீஸார்,பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். உமையலிங்கம் கடத்தப்பட்ட காரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
அந்த கார், சாத்தூர் பகுதியில் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே உமையலிங்கத்தின் மனைவிக்கு போன் அந்த கும்பல், `10 லட்ச ரூபாய் கொடுத்தால்தான், அவரை விடுவிப்போம்' என மிரட்டியிருக்கின்றனர். இதனையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி மனிஷா, அந்த கும்பலைத் தொடர்பு கொண்டு `7 லட்ச ரூபாய்தான் தர முடியும்' எனச் சொல்லி பேசியிருக்கிறார். அந்த கும்பலும் சம்மதித்து பணத்துடன் ராஜபாளையத்துக்கு வரும்படி கூறியிருக்கின்றனர்.

இதனையடுத்து, மனிஷாவும் ,கோமதிராஜூம் ராஜபாளையத்துக்குச் சென்றனர். அங்கு பஜாரில் கார் வந்து நின்றது. மறைந்திருந்த போலீஸார், காரை சுற்றிவளைக்க முயன்றனர். இதனைப் பார்த்து, காரிலிருந்து 6 பேர் தப்பியோடினர். காரை ஓட்டுவந்த ஓட்டுநர் மனோகர் மட்டும் சிக்கினார். உடனடியாக காரில் இருந்த பூசாரி உமையலிங்கத்தை மீட்ட போலீஸார் அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து தப்பியோடிய 6 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க கோவில்பட்டி: ரூ.10 லட்சம் கேட்டுக் கடத்தப்பட்ட கோயில் பூசாரி; சிசிடிவி பதிவால் மீட்ட போலீஸார்..!