மும்பையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி ஜவேரி பஜார், தாதர், ஒபேரா ஹவுஸ் போன்ற இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 27 பேர் உயிரிழந்தனர். 127 பேர் காயம் அடைந்தனர். இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது மொக்கா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்தியன் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் இக்குண்டு வெடிப்புகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகள் ஆவர். கொரோனா காலத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
குண்டு வெடிப்பு நடந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணை தொடங்கியிருக்கிறது. கடந்த வாரம் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நாகி ஷேக், உடனே வழக்கு விசாரணையை தொடங்கவில்லையெனில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறி சிறப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

11 ஆண்டுகள் ஆகிவிட்டதால் விசாரணை தினமும் நடைபெறவேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதனை தொடர்ந்தே இவ்வழக்கு விசாரணை தொடங்கி இருக்கிறது. இவ்வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு 8 குற்றவாளிகளுக்கு எதிரான குற்றசாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மாநிலம் முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் பதிவு செய்யும் போது சம்பந்தப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படவேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் விசாரணையும் தாமதமாகிவிட்டது. கடந்த 2021-ம் ஆண்டு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யாசின் பட்கல் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 10 ஆண்டுக்கும் மேல் சிறையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க மும்பை: 27 பேர் உயிரிழந்த தொடர் குண்டு வெடிப்பு; 11 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய வழக்கு விசாரணை