புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள பிலிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவ, மாணவிகள், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் உதவியுடன், திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிக்காகச் சென்றிருக்கின்றனர்.
விளையாட்டுப் போட்டிகளை முடித்துவிட்டு, கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணையைப் பார்ப்பதற்காக, மாணவ, மாணவிகளை ஆசிரியர் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ஆற்றுக்குள் இறங்கிய தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய நான்கு மாணவிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்

தீயணைப்புத்துறையினர், 4 பேரையும் சடலமாகவே மீட்டிருக்கின்றனர். மாணவிகள் இறந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மாணவிகள் இறந்த செய்தியை அறிந்து, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதவாறே பள்ளி முன்பு குவிந்தனர். அப்போது, மாணவிகளின் பெற்றோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ``விளையாட்டுப் போட்டிக்குச் சென்றவர்களை ஏன் ஆற்றுக்குக் கூட்டிச் சென்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர், இலுப்பூர் டி.எஸ்.பி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். அப்போது பேசிய இறந்த மாணவிகளின் உறவினர்கள், "விளையாட்டுப் போட்டிக்கு போயிட்டு, வெற்றியோட திரும்புவாங்க, வெற்றி மாலை போடலாம்னு இருந்தோம். ஆனா, இன்னைக்கு இறந்துபோன எங்க பிள்ளைகளுக்கு மாலை போட வேண்டிய நிலைமை வந்திருச்சு. விளையாட்டுப் போட்டிக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறி, ஆற்றுக்கு கூட்டிக்கிட்டு போனதோடு, குழந்தைகள் நீரில் மூழ்கும் அளவுக்கு அலட்சியமா இருந்துருக்காங்க.

அலட்சிய அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும்" என்றனர். மேலும், பெற்றோர்கள் இல்லாமல் உடற்கூறாய்வு செய்ததைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக கவனக்குறைவாகச் செயல்பட்ட தலைமையாசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசகாயு இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க 4 மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்; தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!