வீக் எண்டு என்றாலே வெளியே போய் தான் சாப்பிட வேண்டும் என்பது சில குடும்பங்களின் எழுதப்படாத விதி. 'ஒரே மாதிரி சாப்பிட்டு போரடிக்குதுல்ல... ஒரு மாறுதலுக்கு புது டேஸ்ட்டுக்காக ரெஸ்டாரன்ட்டை தேடிப் போறோம்' என்பது அவர்களது பதிலாகவும் இருக்கும். ரெஸ்டாரன்ட்டில் கிடைக்கும் அதே புதுவித சுவை உங்கள் வீட்டு கிச்சனிலும் சாத்தியம். இந்த வார வீக் எண்டை வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் உணவுகளைச் சமைத்து ஸ்பெஷலாக்குங்கள்...
பெர்ரி மாக்டெயில்
தேவையானவை:
ஸ்ட்ராபெர்ரி - 6
ப்ளூபெர்ரி - 5
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்)
சர்க்கரை - 2 டீஸ்பூன்
கொய்யா ஜூஸ் - ஒரு கப்
சோடா - ஒரு கப்
புதினா இலை - அலங்கரிக்கத் தேவையான அளவு
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப

செய்முறை:
பெர்ரி பழங்களை சர்க்கரை, இஞ்சி, கொய்யா ஜூஸுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு அதனுடன் சோடா, ஐஸ்கட்டிகளைச் சேர்த்து புதினா இலைகள் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
ஸ்ட்ராபெர்ரியிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளை சாக்லேட், கேக், ஐஸ்க்ரீம் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். இது நிறமூட்டியாகவும் செயல்படுகிறது.
கேரட்- கொரியாண்டர் சூப்
தேவையானவை:
கேரட் - 4
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்)
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
கேரட்டைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். ஒரு பிரஷர் குக்கரை சூடாக்கி அதில் வெண்ணெயைச் சேர்த்து, நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். அதில் நறுக்கிய கேரட்டைச் சேர்த்து 2 கப் தண்ணீரையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து நான்கைந்து விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பிறகு, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு, ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள் சேர்த்துச் சூடாக்கிப் பரிமாறவும்.
தேவையில்லாத நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை கேரட் டுக்கு உண்டு.
வெஜ் ஸ்ப்ரிங் ரோல்
தேவையானவை:
ஸ்ப்ரிங் ரோல் ஷீட் - 8
வெங்காயத்தாள் - 2
கேரட் - ஒன்று
குடமிளகாய் - ஒன்று
கோஸ் - 100 கிராம்
சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கவும்)
மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு + 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
வெங்காயத்தாள், கோஸ், கேரட், குடமிளகாய் ஆகியவற்றை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கவும். ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூண்டை சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் வெங்காயத்தாள், கோஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி கலவையை ஆற வைக்கவும். மைதாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து விழுதாக செய்துகொள்ளவும்.
ஒரு ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை எடுத்து, ஒரு ஓரத்தில், 2 டீஸ்பூன் காய்கறிக் கலவையை வைத்து சுருட்டி மூடி, ஓரத்தில் சிறிது அளவு மைதா விழுதை தடவி, ஒட்டி, நீளமான ஸ்ப்ரிங் ரோலாக செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி ஸ்ப்ரிங் ரோலைப் பொரித்தெடுக்கவும். எல்லா ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டிலும் இதே போல் செய்துகொள்ளவும். தக்காளி சாஸ், சில்லி சாஸுடன் பரிமாறவும்.
வெங்காயத்தாளில் சி, பி2, ஏ, கே ஆகிய வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
கார்ன் பனீர் டிக்கா
தேவையானவை:
வேகவைத்த கார்ன் - ஒரு கப்
துருவிய பனீர் - அரை கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பிரெட் தூள் - அரை கப்
எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
வேகவைத்த கார்னை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் அரைத்த கார்ன், துருவிய பனீர், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், புதினா, சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், பிரெட் தூள், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு அதை வட்டமான கட்லெட் போல செய்துகொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை சூடாக்கி, அதில் செய்துவைத்துள்ள டிக்கிகளை ஒவ்வொன்றாகப் போட்டு, எண்ணெய்விட்டு இரண்டு புறமும் திருப்பிப்போட்டு பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும். தக்காளி சாஸ், புதினாச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
கார்னில் நார்ச்சத்து மிகுதியாகவும், புரதச்சத்து குறிப்பிடத்தக்க அளவிலும் இருக்கிறது.
மேலும் படிக்க மாக்டெயில், சூப், ஸ்பிரிங் ரோல்... வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் சுவை உணவுகள்... | வீக் எண்டு ஸ்பெஷல்