கோவை பூ. சா கோ கலை அறிவியல் கல்லூரியில், `மாபெரும் தமிழ்க்கனவு தமிழர் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், தமிழர் உணவு குறித்து மருத்துவர் கு. சிவராமன் பேசியதாவது... ``எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் நிலமும் நீரும் சேர்ந்ததே என்று தமிழ்மரபு உணர்த்துகின்றது. இதை ஒற்றை வரியில் `உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே' என்று புறநானூறு சொல்லுகின்றது. கொரோனாவுக்குப் பிறகு ஆரோக்கியம் குறித்த விஷயங்கள் மாறியுள்ளன.
உலக சுகாதார மையம், ஆரோக்கியம் பற்றி "One Health" என்று வலியுறுத்துகிறது. அதாவது உடல், மனம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது, நாம் வாழும் இந்த மண்ணில் ஒவ்வோர் உயிரினமும் சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனித வாழ்வும் ஆரோக்கியமாக அமையும். இதை தமிழ் மரபு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே `பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்' என உரைத்திருக்கிறது.

ஆண்டாண்டு காலம் தமிழ்ச் சமூகம், நீராகார உணவைத்தான் காலை உணவாக எடுத்துக் கொண்டுள்ளது. நீராகரம் என்பது சிறந்த ப்ரோபையாடிக்ஸ் என்று இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடித்து இருக்கிறது. மனித உடலில் உள்ள நிறைய நுண்ணுயிருக்கு நீராகாரம் சிறந்தது. இந்திய அளவில் 40 முதல் 50 சதவீதம் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது. இரும்புச்சத்தை சரி செய்வதற்கு எளிய உணவு கம்பு. அரிசியைவிட கம்பில் எட்டு சதவீதம் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கம்மஞ்சோறு, கம்மங்கூழ் ஆகியவற்றை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள், லோ கிளைசெமிக் (Glycemic) உணவு முறையை கடைப்பிடித்தால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாது. சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்பட்டாலோ, உடல் எடை அதிகமாக இருந்தாலோ மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாது. இவற்றைக் குறைக்க நம் உணவில் நேரடியாக சர்க்கரை அளவு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அதற்கு பதில் சாமை அரிசி, வரகரிசி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த காலத்தில் இனிப்பு நிறைந்த மிட்டாய்களை பிரபலமாக்குகிறார்கள். காதலர் தினத்திற்காக 100 ரூபாய் பாக்கெட்டில் விளம்பரப்படுத்துகிறார்கள். அதற்கு பதிலாக, காதலர் தினத்தன்று காதலருக்கு கடலை மிட்டாய் வாங்கி கொடுக்கலாம். 'கடலை'யில்தான் காதலும் வளர்கிறது.

சர்க்கரை நோய்க்கு சிறந்த பழம் நாவல் பழம். நாவல் கொட்டையை பொடி செய்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. நமக்கான உணவு, எந்த விதத்திலும் இயற்கைக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. தமிழ் மரபு ஒரு சூழலியல் வாழ்வை வைத்திருக்கின்றது. நம் சுவைக்காக இயற்கையை கெடுப்பேன் என்பது தவறான சிந்தனை. தமிழ் மரபு காட்டிய சூழலுக்கு ஏற்ற உணவு முறையை கடைப்பிடிப்போம்" என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்தார்.
மேலும் படிக்க `காதலர் தினத்தன்று கடலை மிட்டாய் வாங்கிக் கொடுங்கள்!'- மருத்துவர் கு. சிவராமன் சொல்லும் காரணம்