விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளின் ஆய்வின்போது ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட மனநல பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியோர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல் நலம் சீராக உள்ளோர் உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மனநல சிகிச்சை தேவைப்படுவோர் அருகிலுள்ள மாவட்டங்களில் அமைந்திருக்கும் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், சுமார் 54 பேர் அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலியல்ரீதியான பாதிப்புக்குள்ளான பெண் மற்றும் விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம உரிமையாளர்களான ஜூபின் பேபி - மரியா தம்பதி உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். பெங்களூர் ஆசிரமத்திலிருந்து காணாமல்போனதாகக் கூறப்பட்ட 16 பேர் குறித்து விசாரிப்பதற்காக 16-ம் தேதி விழுப்புரம் தனிப்படை போலீஸ் பெங்களூருக்கு விரைந்திருந்தது. அதன் பின்பு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த ஆசிரமத்தின்மீது புதிய புகார்களும், கண்டனங்களும் வலுத்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு. அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் விழுப்புரம் வந்திருந்த தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர், அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பெண்களிடம் பாலியல்ரீதியான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர்கள், "இப்போதைக்கு இந்த விவகாரம் குறித்து விசாரித்திருக்கிறோம். அதற்கான அறிக்கையை நாங்கள் சமர்ப்பிப்போம். அதுவரை ஏதும் சொல்ல முடியாது. இரண்டு பெண்கள், பாலியல் குற்றச்சாட்டினை நீதிபதியிடம் தெரிவித்திருக்கின்றனர். அதனை எங்களது விசாரணையிலும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்" என்றனர். தொடர்ந்து, குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் படிக்க "பாலியல் குற்றச்சாட்டு உறுதி!" - அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம்