2022 செப்டம்பர் மாதம் தமிழக அரசு சமூகநிதி கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்தது. கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சட்டத்துக்குட்பட்ட சாதி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு சமூகநீதி முறையாக நிலைநாட்டப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதே இந்த குழுவின் நோக்கம். கடந்தாண்டு நவம்பர் 21ம் தேதி சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சு.ப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னையிலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2008 முதல் தற்போது வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மற்றும் பேராசிரியர் நியமனம் தொடர்பாக அந்தக் குழுவைச் சேர்ந்த கருணாநிதி, சுவாமிநாதன் தேவதாஸ் ஆகியோர் பிப்ரவரி 2-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
”ஒரு பல்கலைக்கழகத்தில் சமூகநீதி என்பது எந்த அளவுக்குச் சரியாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான், இந்தக் குழுவின் முக்கியமான நோக்கம். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 69% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்த 69% இட ஒதுக்கீடு சரியான முறையில் அமலில் இருக்கிறதா... சரிவரப் பின்பற்றவில்லையெனில் எதற்காகப் பின்பற்றவில்லை என ஆராய்ந்து அதனை முறைப்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம். ஆய்வுப் பணிகளை இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம், ஆய்வுப் பணிகள் முடிவுற்றபின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதற்கு ஒரு வாரமோ, பத்து நாள்களோ ஆகலாம்” எனச் செய்தியாளர்கள் மத்தியில் சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர் சுவாமிநாதன் தேவதாஸ் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் குழுவில் எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் பிசி, எம்.பி.சி வகுப்புகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டிய சமூகநிதி கண்காணிப்புக் குழுவினர், அந்தக் குழுவில் பி.சி, எம்.பி.சி வகுப்புகளைச் சேர்ந்தவர்களையும் இணைக்கச் சொல்லியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்துப் பேட்டியளித்த அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார், “அண்ணா பல்கலைகழத்தைப் பொறுத்தவரை 69% இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி வருகிறோம். பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுவில் எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். மேலும் அரசின் கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றியே அனைத்துவித பணிகளும் நடக்கின்றன. கண்காணிப்புக் குழுவினர் சொல்வது போல் பி.சி, எம்.பி.சி வகுப்புகளைச் சேர்ந்த பேராசிரியர்களை பல்கலைக்கழக தேர்வுக் குழுவில் இணைப்பது குறித்து துணைவேந்தரிடம் ஆலோசனை நடத்தித் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவருடன் இது குறித்துப் பேசினோம். ``சேர்க்கை மற்றும் பேராசிரியர் நியமனம் மற்றும் சமூகநீதிக்கு இழுக்கு போன்ற முறைகேடுகள் இதுவரை நடந்திருப்பதாக எந்த தகவலோ, புகாரோ இல்லை. அப்படி இருந்திருந்திருந்தால் அது குறித்து உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கும். எனவே புகார் வந்து, அதனை விசாரிக்கக் குழுவினர் வந்திருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. வழக்கமான ஆய்வாகத்தான் நடந்திருக்கும் என அனுமானிக்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க `அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூகநீதி பின்பற்றப்படுகிறதா?!’ - சமூகநீதி கண்காணிப்புக் குழு திடீர் ஆய்வு