1984-ம் ஆண்டு, ஜூன் 3-6. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்தது. அங்கு பதுங்கியிருந்த காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலேவையும் அவருடைய ஆதரவாளர்களையும் ராணுவம் சுட்டுக்கொன்றது. அத்தோடு, காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை அமைதி நிலைக்குப் போய்விட்டது.

‘புளூ ஸ்டார் ஆபரேஷன்’ என்று குறிப்பிடப்பட்ட அந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் ஆக்டிவேட் ஆகியிருக்கிறார்கள். காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துவந்த பஞ்சாப் மாநிலத்தில், தற்போது பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த நேரத்தில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் கறமிறங்கியிருக்கிறார்கள்.
‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பு மறைந்த நடிகர் தீப் சித்துவால் ஆரம்பிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாலை விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்தார். தற்போது, ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் தலைவராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட அம்ரித்பால் சிங், துபாயிலிருந்து கடந்த ஆண்டு பஞ்சாப் வந்தார். 29 வயது இளைஞரான இவர், காலிஸ்தான் ஆதரவாளர். 1984-ல் புளூ ஸ்டார் ஆபரேஷன் மூலம் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பிந்திரன்வாலேவைப் போலவே உடையணியும் அம்ரித்பால் சிங், பிந்திரன்வாலேவைப் போலவே பேசவும் செய்கிறார். ஆகவே, இவரை இரண்டாம் பிந்திரன்வாலே என்று இவருடைய ஆதரவாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவரது நண்பரான லவ்ப்ரீத் என்பவர் கடத்தல், திருட்டு வழக்கில் அஜ்னாலா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். பொய் வழக்கில் லவ்ப்ரீத் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய அம்ரித்பால், ‘லவ்ப்ரீத்தை விடுவிக்க அஜ்னாலாவுக்கு வாருங்கள்’ என்று தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதையடுத்து, கைகளில் வாள்களையும் துப்பாக்கிகளையும் தடிகளையும் ஏந்தியவாறு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அஜ்னாலாவில் திரண்டனர்.
அம்ரித்பாலின் ஆதரவாளர்கள், காவல்துறையினர் அமைத்திருந்த இரும்புத் தடுப்புகளையெல்லாம் உடைத்துக் கொண்டு முன்னேறி காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். அதில், காவலர்கள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன. பின்னர், அஜ்னாலா காவல்நிலையத்தையும் அவர்கள் முற்றுகை இட்டனர். அம்ரித்பால் சிங்குக்கு அடிபணிந்த காவல்துறை, லவ்ப்ரீத் மீது பதியப்பட்டிருந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்று லவ்ப்ரீத்தை விடுதலை செய்திருக்கிறது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ததற்காக, ஆம் ஆத்மி அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிதி வருவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியாக அம்ரித்பால் பேசும் பேச்சுகள், வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. “எங்கள் லட்சியம் காலிஸ்தான். அது தவறான ஒன்றாகப் பார்க்கக் கூடாது. அது ஒரு தத்துவம். தத்துவம் ஒருபோதும் சாகாது. காலிஸ்தானை டெல்லியிடமிருந்து நாங்கள் கேட்வில்லை” என்று அம்ரித்பால் பேசியிருக்கிறார். மேலும், “இந்திரா காந்திக்கு நேர்ந்தது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நேரும்” என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
1984-ம் ஆண்டு, அன்றைய பிரதமர் இந்திரா காந்திதான், பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பினார். அதனால், சீக்கியர்கள் இந்திரா காந்தி மீது கோபத்தில் இருந்தனர். அந்தச் சூழலில்தான், இந்திரா காந்தியின் மெய்க்காப்பாளர்களாக இருந்த இரண்டு சீக்கியர்கள் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றனர். அதைக் குறிப்பிட்டுத்தான் அம்ரித்பால் சிங் பேசியிருக்கிறார்.

தற்போது, அமைதியான மாநிலமாக பஞ்சாப் விளங்கிவருகிறது. அதே நேரம், 1980-களில் நிகழ்ந்த துயர சம்பவங்களை சீக்கியர்கள் மறந்துவிடவில்லை. வெளிநாடுகளில் ஏராளமான சீக்கியர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களில் பலர் காலிஸ்தான் ஆதரவு சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பஞ்சாபில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்களுக்கு நிதி வருவதாகச் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், அம்ரித்பால் சிங்குக்கு காலிஸ்தான் ஆதரவு சிந்தனை கொண்டவர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைப்பதாக செய்திகள் கூறுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்திருப்பதால், அம்ரித்பால் சிங் குறித்தும், அவருக்கு பின்னால் இருப்பவர்கள் குறித்தும், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் தோண்டித்துருவ ஆரம்பித்துள்ளன.
மேலும் படிக்க பஞ்சாப்பை பிரித்து ‘காலிஸ்தான்’... யார் இந்த அம்ரித்பால்... அவருக்கு எப்படி ஆதரவு பெருகிறது?!