ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க, நாம் தமிழர், தே.மு.தி.க கட்சிகள் உட்பட 96 வேட்புமனு தாக்கலாகியிருந்தது. அதில் மொத்தம் 80 வேட்புமனுக்கள் தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக பன்னீர் மற்றும் தினகரன் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையேதான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு கிழக்கில் தேர்தல் பணியாற்றிவரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். ``இடைத்தேர்தலில் ஆளும்கட்சி தான் வெற்றியடையும் என்ற பார்முலா-வை அ.தி.மு.க எதிர்க்கட்சியில் இருந்து பலமுறை முறியடித்து இருக்கிறது. அதன்படி, இந்த இடைத்தேர்தலில் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்கு பெற்றாலே அது எங்களுக்கு வெற்றிதான்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளைவிட, தற்போது அ.தி.மு.க-வின் பலம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. பன்னீர், தினகரன் வாபஸ், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு, தி.மு.க அரசின் மீதான அதிருப்தி வாக்குகள், இரட்டை இலைக்கான மவுசு என அ.தி.மு.க-வுக்கு நாளுக்கு நாள் மைலேஜ் கூடிவருகிறது. ஈரோடு கிழக்கு தவிர, தென் அல்லது வடமாவட்டங்களில் இந்த ஒரு சமயத்தில் இடைத்தேர்தல் வந்திருந்தால் எடப்பாடி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டார். ஈரோடு கிழக்கில் அதிமுக மிக பலமாகவே இருக்கிறது. குறிப்பாக, வேட்பாளர் தென்னரசு இதே தொகுதியில் இருமுறை வெற்றிப் பெற்று இருக்கிறார். அதனால்தான், தனித்து போட்டியிட முடியில் இருந்த பா.ஜ.க பின்வாங்கியது. கடந்த முறை தனித்து போட்டியிட்ட டிடிவி தினகரன் தரப்பு, நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளைதான் பெற்றது.
தற்போது இடைத்தேர்தலில் அதுவும் கிடைக்காது என்பதால்தான் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்ற காரணத்தை வைத்து தேர்தலில் இருந்து பின்வாங்கிட்டது. ஓ.பி.எஸ்ஸும் ஐந்து இலக்கத்தில்கூட வாக்குகள் பெற முடியாது என்பதால், வாபஸ் பெற்றுவிட்டார். இவையெல்லாமே அ.தி.மு.க-வுக்கு கூடுதல் பலமாகிவிட்டது.

அதன்படி, அ.தி.மு.க-வின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கு கிடைத்துவிடும். குறிப்பாக, ஈரோடு கிழக்கு நகர்ப்புறம் என்பதால் சொத்துவரி உயர்வு, மின்கட்ட உயர்வால் ஆட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதுபோக, தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க-வினர் மட்டுமே களத்தில் இருந்து வேலை பார்க்கிறார்கள்.
காங்கிரஸார் ரொம்பவும் மெத்தனமாக இருக்கிறார்கள். எங்கள் பக்கத்தில். அ.தி.மு.க - பா.ஜ.க-வுக்கு இடையே சுமூகமான உறவு இல்லையென்பது களத்திலும் எதிரொலித்து வருகிறது. அடிப்படை தொண்டர்கள், நிர்வாகிகள் பாஜகவை இணைத்து தேர்தல் பணியாற்ற தயாராக இல்லை. இதன் காரணமாக, பா.ஜ.க வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டாது. இதனால், சிறுபான்மையினரின் வாக்குகள் எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய பட்டியலின மக்களின் தலைவர்களும், புதிய நீதிக் கட்சி ஏசி சண்முகம் போன்ற சமூக பின்னணி கொண்ட தலைவர்களும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். அதேபோல, தமிழ் மாநில காங்கிரஸுக்கும் இங்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. இதுவும் எங்களுக்கு கூடுதல் பலமாக அமைந்து இருக்கிறது. " என்கின்றனர் விரிவாக.
மேலும் படிக்க ஈரோடு கிழக்கு: எடப்பாடி `ரூட் கிளியர்’ ; சிதறாமல் இணையுமா வாக்குகள்?! - இடைத்தேர்தல் அப்டேட்