கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருபவர் மணிவேல். இவர், நேற்று காலை கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகம் பின்பக்கம் உள்ள செல்போன் டவர் மீது ஏறி, திடீரென தற்கொலைக்கு முயன்றார். அங்குள்ள போலீஸார் அவரை சமாதானப்படுத்திய நிலையில் அவர்களிடம் மணிவேல், ‘‘என்னோட விருப்பம் இல்லாம, என்னையும் சேர்த்து, 8 பேரை கோயமுத்தூருக்கு டிரான்ஸ்பர் செய்திருக்காங்க. நாங்க பல மாவட்டத்துல வேலை செய்து இப்பதான், சொந்த மாவட்டத்துக்கு வந்திருக்கோம். இங்க சேர்ந்து ரெண்டு மாசத்துலயே, எந்த புகாருமே இல்லாத எங்கள டிரான்ஸ்பர் செய்திருக்காங்க,’’ எனக்கூறினார்.
சம்பவ இடத்திலிருந்த போலீஸார் அவரை சமாதானப்படுத்திய நிலையில், தற்கொலை முயற்சியை கைவிட்டு, செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, ‘‘டிரான்ஸ்பர் கொடுத்தது குறித்து மணிவேல், உயரதிகாரிகளிடம் கேட்ட போது, அவரிடம் உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பணியின் போது அதிக பணிச்சுமை உள்ளதாக மணிவேல் பலமுறை புலம்பி வந்தார். மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்,’’ என்கின்றனர். இது குறித்து தகவல் கேட்க, மாவட்ட எஸ்.பி சரோஜ் குமார் தாகூரை நாம் பலமுறை போனில் தொடர்பு கொண்டும், அவர் போன் எடுக்கவில்லை.
ஓசூரில் நடந்த கலவரத்தின் எதிரொலியாக சமீபத்தில், 30 தனிப்பிரிவு போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஆயுதப்படையில் போலீஸார் டிரான்ஸ்பர் செய்தது, போலீஸார் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க கிருஷ்ணகிரி: டவரில் ஏறி ஆயுதப்படை காவலர் தற்கொலை முயற்சி; `புகாரே இல்லாம டிரான்ஸ்பர்’ என கதறல்