ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கணபதி நகர், நாராயணவலசு, முனிசிபல் காலனி, ராஜாஜி நகர், பி.பெ.அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின், ``பெரியாரின் பேரன் இளங்கோவனை ஆதரித்து, கருணாநிதியின் பேரனான நான் வாக்குகளை கேட்டு வந்திருக்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டப்பேரவை தேர்தலிலும் பிரசாரம் செய்த போது மிகப்பெரிய வெற்றியை தந்தீர்கள். காலமான திருமகன் ஈவெரா செய்த பணியை தொடர வேண்டும் என்பதற்காக அவரின் தந்தைக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும்.

நீங்கள் இந்த முறை எனக்கு ஒரு உறுதியை தர வேண்டும். கடந்த முறை 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இம்முறை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நீங்கள் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால் நான் மாதம் ஒருமுறை இந்தத் தொகுதிக்கு வந்து செல்வேன்.
இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். முன்னாள் எம்.எல்.ஏ.தென்னரசுவை மக்கள் விரட்டியடிப்பதை பார்த்தேன். மக்கள் எதிர்ப்பின் விரக்தியால் தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இங்கு பிரசாரம் மேற்கொண்ட போது, `மீசை வைத்த ஆம்பிள்ளையாக, வேட்டி கட்டிய ஆம்பிள்ளையாக இருக்க வேண்டும்’ என்று மீசையின் பெருமையைப் பற்றி பேசினார்.
அவருடைய மீசையின் பெருமையை நான் பேசட்டுமா? 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பின் தலைமைச் செயலகத்தில் சி.பி.ஐ. சோதனை போட்டபோது வாய்க்கு ஜிப் ஆக மாறியது அவரின் மீசை. கோடநாடு பெயரைக் கேட்டாலே, அச்சத்தில் அவரின் காதை மூடிக்கொண்டது அவரின் மீசை. தூத்துக்குடியில் 13 அப்பாவிகளின் கழுத்தை நெரிக்க காரணமாக இருந்தது அவரின் மீசை. இரண்டு பெண்களின் காலின் செருப்புக்கு பாலீஷ் போடுவதற்கு பிரஷ்ஷாக இருந்தது அவரின் மீசை. எந்த பயனும் இல்லாத அந்த மீசையைத் தான் மக்கள் மழுங்கடித்தார்கள்.

2, 3 நாள்கள் ஷேவிங் செய்யாமல் இருந்தால் எல்லோருக்கும் மீசை வரத்தான் செய்யும். பெரியார் பிறந்த மண்ணில் நின்று கொண்டு இப்படியெல்லாம் பேசும் நீங்கள் எப்படி முதலமைச்சர் ஆனீர்கள், நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டீர்களா?” என்று கேட்டபடி, எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலில் விழும் புகைப்படத்தைக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, ``நம்முடைய முதல்வரை போல நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டீர்களா, இவர் தான் நம்மை பார்த்து ஆம்பிளையா என்று கேட்கிறார். அ.தி.மு.க. ஆட்சியின்போது இருந்த அதே அடிமைத்தனம் தான் இப்போதும் நீடிக்கிறது. இப்போது மோடிக்கு அடிமையாக இருக்கும் அவர் எப்போதும் யாருக்கும் உண்மையாக இருந்ததில்லை.
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று கூறியவர் அண்ணா. அவரின் பெயரால் கட்சி நடத்தி வரும் பழனிசாமி, ஆளுநரின் அடிமையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
சட்டப்பேரவையில் 19 தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பியும், அதை நிறைவேற்ற கையெழுத்திடாமல் ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். என்றாவது அந்த ஆளுநரைச் சந்தித்து மக்கள் பிரச்னை சம்பந்தப்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற கையெழுத்திடுமாறு ஆளுநரை வலியுறுத்தி இருக்கிறாரா
தனது கட்சிப் பிரச்னையை தீர்க்கச் சொல்லி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு மோடியைத் தேடிச் சென்று சந்திக்கும் இவர்கள் என்றாவது மக்கள் பிரச்னைை தீர்க்குமாறு மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்களா.

ஒருமுறை சட்டப்பேரவையில் இருவரையும் பார்த்து, `என்னுடைய காரில் ஏறி கமலாலயம் சென்று விட வேண்டாம்’ என்று நான் கூறினேன். அப்போது ஓ.பி.எஸ். எழுந்து, `எங்களது கார் எப்போதும் கமலாலயத்துக்கு செல்லாது’ என்றார். ஆனால், இப்போது இருவரும் போட்டி போட்டு கொண்டு கமலாலயத்தில் தான் காத்து கிடக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் கமலாலயம் ஒரு கட்சி அலுவலகம் கிடையாது. அது ஒரு பயிற்சி பட்டறை. அங்கிருந்த தமிழிசை ஆளுநர் ஆகி விட்டார். தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநர் ஆகி விட்டார். இதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ். ஆளுநராக அறிவிக்கப்படுவார். ஈ.பி.எஸ். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக வருவார்.
அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் நீங்கள் அண்ணாவுக்கும் உண்மையாக இல்லை, எம்.ஜி.ஆருக்கும் உண்மையாக இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் அக்கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். ஆனால், குறுக்கு வழியில் தான் இப்போது எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தலைவராக இருக்கிறார். ஜெயலலிதா, சசிகலா , ஓ.பி.எஸ். மக்கள் என யாருக்கும் உண்மையாக இல்லை. நீங்கள், டெல்லியில் உள்ள உங்கள் எஜமானர்களான மோடிக்கும், அமித் ஷாவுக்கும் தான் அடிமையாக இருக்கிறீர்கள்.
நம்முடைய ஆட்சி அமைந்த பிறகு சென்னை, கிண்டியில் ரூ.240 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட கிங்ஸ் மருத்துவமனை திறப்பு விழா செய்வதற்காக காத்திருக்கிறது. அதேபோல மதுரையில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டு டிசம்பர் மாதம் தான் முடியும் என்று நினைத்தோம். ஆனால், 6 மாதங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு ஜூன் 3-ம் தேதி தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இதெல்லாம் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு கட்டி முடிக்கப்பட்ட திட்டங்கள்.
இதேபோல 2019-ல் மதுரையில் ரூ.3,000 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித் தருவதாகக் கூறி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதற்காக இதுவரை ரூ. 300 கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், அங்கு இருப்பது இந்த ஒரே செங்கல்தான். அதையும் நான் தூக்கிட்டு வந்து விட்டேன். இதுதான் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. அதுவும் என்னிடம் தான் உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் கொரானா பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4,000 வழங்கியது, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து வசதி, மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, கொரானா காலத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு பகுதியில் கனி மார்க்கட், காளைமாடு சிலை பகுதியில் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நாம் வெற்றி பெற்றதும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ரூ.1,000 கோடி செலவில் பணிகளை செய்து தரப்படும். அடுத்த 7 நாள்களும் மக்களாகிய நீங்களே பிரசாரத்தில் ஈடுபட்டு மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் படிக்க ``பன்னீர் ஆளுநர் ஆவார்; எடப்பாடி பாஜக மாநிலத் தலைவர் ஆவார்” - தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின்