ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நேற்று இரவு மும்பையில் நடந்த இந்து மத குருக்களில் ஒருவரான சிரோமணி ரோஹிதாஸின் 647-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ``மனச்சாட்சியும், உணர்வும் ஒன்றுதான். அதன் மீதான கருத்துக்கள்தான் வேறுபடுகின்றன. வாழ்வதற்காக நாம் சம்பாதிக்கும் போது நமக்கு சமுதாயத்தின் மீதும் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு பணியும் சமுதாயத்தின் நன்மைக்காக இருக்கும்போது, அவை சிறியதா, பெரியதா அல்லது வித்தியாசமானதாக எப்படி இருக்கும். நம்மை படைத்தவருக்கு நாம் அனைவரும் சமம். சாதி, மதம் என்று எதுவும் கிடையாது. இந்த வேறுபாடுகளை பூசாரிகள்தான் உருவாக்கினார்கள்.

அவை தவறு. இன்றைய சூழ்நிலையில் உங்களை சுற்றி நடக்கும் அனைத்திலும் கவனம் செலுத்துங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களது மதத்தை விட்டுவிடாதீர்கள். சமய செய்திகளை எடுத்துரைக்கும் விதம் வேறுபட்டாலும், கொடுக்கப்படும் செய்திகள் ஒன்றுதான். மற்றவர்களின் மத நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், ஒருவர் தனது மதத்தை கடைப்பிடிக்கவேண்டும். காசியில் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டபோது சத்ரபதி சிவாஜி ஒரு முறை ஒளரங்கசீப்பிற்கு கடிதம் எழுதினார்.
அதில் இந்துக்களும், முஸ்லிம்களும் கடவுளின் பிள்ளைகள். இதில் ஒருவர் மீது விரோதத்தை காட்டுவது தவறு. அவனைவருக்கும் மதிப்பு கொடுப்பது உங்களது கடமை. இந்துக்களுக்கு எதிரான செயல்கள் நிறுத்தப்படவில்லையெனில் நான் வாள் எடுக்கவேண்டி வரும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். உங்கள் மதம் சொல்கின்றபடி உங்கள் வேலையை செய்யுங்கள். சமுதாயத்தை ஒன்றிணைத்து அதன் முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க ``சாதிகளை கடவுள் உருவாக்கவில்லை; பூசாரிகள் ஏற்படுத்தியது” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்