சிவகாசியில் பிறந்து, தமிழ்நாட்டில் படித்து, வேலையை தேடித் தேடிப் பல நாடுகளுக்குச் சென்றவர் சசீந்திரன் முத்துவேல். அடுத்தடுத்து சோதனைகள், பல திருப்பங்கள் என இவர் வாழ்வில் சந்தித்த சவால்கள் ஏராளம். இப்போது பாப்புவா நியூ கினியா நாட்டின் ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநராக ஆட்சி செய்கிறார்.
சிவகாசியில் 1974 -ல் பிறந்தார் சசீந்திரன் முத்துவேல். இவரின் குடும்பம் விவசாயம் சார்ந்தது அல்ல. ஆனால் இவர் பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தோட்டக்கலைத்துறையில் ஆர்வத்துடன் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் நிர்வாகத்துறையில் முதுகலை டிப்ளமோ படித்தார்.
பின்னர் 1998-ம் ஆண்டு சசீந்திரன் முத்துவேல் திருநெல்வேலியைச் சார்ந்த சுபா அபர்ணாவை மணந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள்.

மலேசியாவில் வேலை கிடைக்க இவர்கள் அங்கு குடிபெயர்கிறனர். சசீந்திரன் முத்துவேல் சில காலம் மலேசியாவில் பணியாற்றினார். எதிர்பாராத விதமாக இவர் வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டது. அடுத்த வேலை தேட ஆரம்பித்தார். முயற்சியின் பலன் கைகூடியது. இவருக்குச் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. மலேசியாவிலிருந்தது சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். ஆனால் அங்கும் அவருக்கு வேலை திருப்திகரமாக இல்லை. அதனால் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிடுகிறார். அதற்கு அந்த நாட்டு விசா வாங்க வேண்டும்.
ஆஸ்திரேலியா விசா பெற, படித்த படிப்பின் சான்றிதழ்கள் மற்றும் வாங்கிய பட்டங்கள் எல்லாம் வேண்டும். ஆனால் இவை அனைத்தும் சிவகாசியில் உள்ள அவர் வீட்டில் வைத்திருந்திருக்கிறார். அசல் சான்றிதழ்கள் மற்றும் வாங்கிய பட்டத்தை எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்றபோது பெட்டி விமான நிலையத்தில் தவறிவிடுகிறது. இவர்களின் கைகளில் பாஸ்போர்ட்கள் மட்டுமே இருந்தது. இந்த இழப்புக்கு நஷ்டஈடு கிடைத்தது. ஆனால் அனைத்து சான்றிதழ்கள், பட்டங்களின் நகலைப் பெறப் பல மாதங்களுக்கு மேல் ஆகும். அது வரை ஆஸ்திரேலியா செல்ல விசா வாங்க முயலக்கூட முடியாது என்ற நிலையில் மாட்டிக் கொள்கிறார் சசீந்திரன் முத்துவேல்.

அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா அருகே உள்ள ஒரு தீவில் உள்ள பலசரக்கு கடையில் மேலாளர் வேலை கிடைக்கிறது. இந்த தீவு பாப்புவா நியூ கினியா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனி நாடு. 1999 -ம் ஆண்டு குடும்பத்துடன் இந்த நாட்டிற்கு செல்கிறார்.
மீன் பிடித்தலும் விவசாயமும் இந்த நாட்டின் முக்கியத் தொழிலாக இருந்தது. இங்கு ஆப்பிரிக்கர்களை ஒத்த மக்கள் வாழ்கிறனர். இங்கு சுமார் ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர். இங்கே ஆங்கிலம், டொக் பிசின் (Tok Pisin) மற்றும் கிரி மோட்டு (Hiri Motu) ஆகிய மூன்றும் அதிகாரபூர்வ மொழி. தவிர சுமார் 850 பிற மொழிகளும் இங்கு புழக்கத்தில் உள்ளன. இருப்பினும் டொக் பிசின் மொழியைத்தான் இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசுகின்றனர். இந்த நாடு 1975ஆம் ஆண்டுதான் ஆஸ்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்று தனி சுதந்திர நாடானது.
2015 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நாட்டில் 15 - 24 வயதுக்குள் எழுதப்படிக்கத் தெரிந்த இளைஞர்கள் 67 சதவிகிதம்தான். இதனில் படித்த பெண்கள் 69 சதவிகிதமும் ஆண்கள் 64 சதவிகிதமாகவும் உள்ளனர். தீவு நாடுகளில் இது மூன்றாவது பெரிய நாடாகும். இந்த நாட்டின் பரப்பளவு 4,62,840 கி.மீ அதாவது இது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களின் மொத்த பரப்பளவிற்கு சமம்.
இந்த நிலப்பரப்பில் சுமார் 71% காடுகளால் சூழப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வாழை இனம் மற்றும் தனித்துவ பறவை இனங்கள் இங்கு காணப்படுகின்றன.
ஃபோர்ட் மோரேஸ்பி (Port Moresby) என்ற பெருநகரம்தான் இதன் தலைநகரம். பாப்புவா நியூ கினியா 22 மாநிலங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் மேற்கு நியூ பிரிட்டன். இந்த மாநிலத்தின் தலைநகர் கிம்பே ஆகும். அங்கு ஒரு சிங்கப்பூர்காரருக்குச் சொந்தமா ஹமாமாஸ் டிரேடிங் லிமிடெட்டின் என்ற தனியார் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒன்றில்தான் சசீந்திரன் முத்துவேல் மேலாளராக பணியாற்றினார்.

பப்புவா நியூ கினியா மக்கள் கிழங்கு வகைகளுடன் ஆடு, மாடு, கோழி மீன் என அசைவ உணவைத்தான் அதிகம் சாப்பிடுகின்றனர். ஆனால் சசீந்திரன் முத்துவேல் சுத்த சைவம். இந்த நாட்டில் நீண்ட காலம் அவர் தயிர்சாதம் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தார். இங்கு மக்கள் பேசும் மொழியை தன் கடின உழைப்பினால் கற்றுத் தேர்ந்தார்.
ஆனாலும் இவருக்கு சோதனைகள் தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த ஓர் ஆண்டுக்குள் ஹமாமாஸ் டிரேடிங் என்ற சிங்கப்பூர் நிறுவனம் மூடப்படப்பட்டது. சசீந்திரன் முத்துவேலின் வேலை பறிபோனது. அவர் உடைந்து போகிறார்.
பாப்புவா நியூ கினியாவில் இருப்பதா, அல்லது இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதா என்று முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் தைரியமாக அவர் வேலை பார்த்த நிறுவனம் நடத்திய கடைகளில் ஒன்றைக் குத்தகைக்கு எடுக்கிறார். அதன் உரிமையாளராகக் கடையை நடத்துகிறார். திறமையாக வியாபாரம் செய்கிறார். வியாபாரம் பல்கிப் பெருகி வலுவடைகிறது. இவரும் அங்குள்ள மக்கள் பேசும் மொழியில் தேர்ச்சி அடைகிறார். அதனால் அவரால் வாடிக்கையாளர்களிடம் மனமிட்டு பேச முடிகிறது.

அவரின் கடைக்கு வரும் ஆசிரியர்கள் மூலம் அருகில் உள்ள பள்ளிகளில் தேவையான அளவு மேசைகளும் பெஞ்சுகளும், நாற்காலிகளும் இல்லை எனத் தெரிந்து கொள்கிறார். தன் வருமானத்தில் ஒரு பகுதியைக் கொண்டு பள்ளிகளுக்குத் தேவையான மேசைகள் நாற்காலிகள் வாங்கிக் கொடுக்கிறார். உள்ளூர் மக்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இவர் உதவும் குணம் படைத்தவர் என அறிந்து பிற பள்ளிகளும் உதவி கேட்டு வருகின்றனர். இவரும் சளைக்காமல் இயன்ற அளவு உதவுகிறார். இவ்வாறாக இவரின் வாழ்க்கை இனிதே செல்கிறது. 2007-ம் ஆண்டு இவர் பப்புவா நியூ கினியாவின் குடிமகனாகிறார். இவரின் வணிகமும் வளர்ச்சியடைந்து கடையும் பல கிளைகளாக விரிவடைந்தது.
அந்த நாட்டில் ஒரு தேர்தல் நேரத்தில், ``இவ்வளவு உதவும் குணம் கொண்ட நீங்கள் ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது?” என உள்ளூர் வாசிகள் இவரிடம் கேட்கின்றனர். இவரும் மக்கள் விருப்பப்படி, சீர்திருத்தக் கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார். பின்னர் 2009 -ம் ஆண்டு முதன் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் !
பின்னர் 2012 -ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு நியூ பிரிட்டன் மாநில வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் 24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று அந்த மாநில ஆளுநராகிறார்.

நம் நாட்டில் 35 வயதுக்கு மேல் உள்ள இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் ஆளுநராகலாம். ஆளுநர் பதவிக்கு எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. நம் நாட்டில் ஆளுநர் ஒரு நியமனம் பதவியே. ஆனால் இந்த விசயத்தில் பாப்புவா நியூ கினியா நம் நாடு மாதிரி அல்ல. மக்களைச் சந்தித்து, தேர்தலில் ஓட்டு பெற்று, வெற்றி பெற்றால் மட்டுமே ஆளுநர் பதவிக்கு வரமுடியும். அதாவது அந்த நாட்டின் ஆளுநர், நம் நாட்டின் மாநில முதலமைச்சருக்கு இணையானவர்! அதிகாரமிக்கவர்!
பப்புவா நியூ கினியாவில் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்ட முதலாவது இந்தியர் என்ற பெருமையை சசீந்திரன் முத்துவேல் பெற்றுள்ளார். இவர் அந்த மாநிலத்தை ஆளராக பதவியேற்றது முதல், இவருடைய மனைவி சுபா அபர்ணா வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிறார்.
2017 -ம் ஆண்டு மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றும் பாப்புவா நியூ கினியாவில் ஆளுநராக இனிதே பணி பணியாற்றி வருகிறார். அவருடன் இணையதள வாயிலாக நான் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இவரிடம் தான் ஒரு ஆளுநர் என்ற அலட்டல் இல்லை, அதிகாரத் தொனியிலை. எளிதில் அணுகக்கூடிய சிறந்த மனிதர்! நிறைகுடம் தளும்பாது எனப் புரிந்து கொண்டேன்.

ஆளுநர் சுசீந்திரன் 2022 மார்ச் 6-ம் தேதி கோவையில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டார். அவரிடம் வர்த்தகம், தொழில் துவங்கும் வாய்ப்புகள் நம் நாட்டு மக்களுக்கு ஏற்றவகையில் அங்கு உள்ளதா என கேட்டதற்கு, ``பாப்புவா நியூ கினியா 90 சதவிகித அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதியே செய்து வருகிறது, இந்திய உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் தொழிலதிபர்களுக்கும் நான் ஆளும் மேற்கு நியூ பிரிட்டன் மாநிலத்தில் புதிய தொழில் தொடங்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் விவசாயம், உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகள் முக்கியமானது. நான் ஆளுநராக பொறுப்பில் இருக்கும் மேற்கு நியூ பிரிட்டன் மாநிலத்தில் தொழில் தொடங்க தேவையான தகவல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் இந்தியாவிலிருந்து அங்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் உரிமத்தை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறினார்.
2022 -ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மீண்டும் அந்த நாட்டில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 51.48 சதவிகித வாக்குகளைப் பெற்று மூன்றாவது முறையாக மீண்டும் இந்த மாநிலத்தின் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

ஜெயலலிதா போல் இவரும் மூன்று முறை அமோக வெற்றி பெற்று ஆட்சி செய்கிறார். 48 வயதே ஆகும் சுசீந்திரன் முத்துவேல் மேலும் பல தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. `கலைஞர் ஐந்து முறை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து போல் நீங்களும் மென்மேலும் பல சாதனைகளைச் செய்ய வேண்டும்' என்று அவரை வாழ்த்தினேன்.
2023 ஜனவரி 11, 12 ஆகிய நாட்களைத் தமிழக அரசு உலகத் தமிழர்கள் தினமாகக் கொண்டாடியது. பல்வேறு நாடுகளில் வாழும் 200 -க்கும் மேற்பட்ட அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் ஒன்று சேர்ந்தனர். தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சியே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்க விருந்து. இந்த நிகழ்வில் ஆளுநர் சுசீந்திரன் முத்துவேலும் கலந்து கொண்டார். கீழ்க்காணும் படத்தில் சுசீந்திரன் முத்துவேலுடன் இருப்பவர் முனைவர் பாலகிருஷ்ணன் இராமநாதன்.

கும்பகோணத்தில் பிறந்த முனைவர் பாலகிருஷ்ணன் இராமநாதன் சிங்கப்பூர் வாழ் தமிழர். இவர் சிங்கப்பூரில் ACE இன்டர்நேசனல் என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துடன் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை இணைத்து இயக்கிவருகிறார். ஆளுநர் சுசீந்திரன் முத்துவேலுடன் முனைவர் பாலகிருஷ்ணன் இராமநாதனும் தமிழக அரசு நடத்திய உலக தமிழர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
சசீந்திரன் முத்துவேல் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனார் கூற்றை உணர்ந்து வாழ்கிறார். அதேபோல, ’நாட்டின் முன்னேற்றம்தான் முக்கியம். யார் ஆண்டால் என்ன? பள்ளிகளின் தரம் உயரவேண்டும்; நம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும்’ என்று நினைத்து தன் இனம் அல்லாத வெளிநாட்டவரை, ஒரு மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்த மேற்கு நியூ பிரிட்டன் மாநில நியூ கினியா மக்களை எப்படி பாராட்டுவது! அவர்களுக்கும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புரிதலே உள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
காலங்களை புரட்டிப்பார்தால் நம் இந்தியத் திருநாட்டிலும் இது மாதிரி சாதனைகள் நடந்தேறியுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் ஆவார். பிறப்பால் இவர் இந்தியர் அல்லர். இவர் சௌதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற புனித மெக்கா நகரில் பிறந்தவர். பின்னர் இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்தான் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission), சாகித்திய அகாடமி மற்றும் இந்தியத் தொழில் நுட்பக் கூடங்களை ( IITs) உருவாக்கியவர். இவரின் பிறந்த நாளே இந்தியக் கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

மௌலானா அப்துல் கலாம் ஆசாத் இல்லை என்றால் இன்று இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களான இந்தியத் தொழில் நுட்பக் கூடங்கள் இல்லை. எழுத்தாளர்களை உரமிட்டு வளர்க்கும் சாகித்திய அகாடமி இல்லை.
நம் வளர்ச்சிக்கு சௌதி அரேபியா மௌலானா அப்துல்கலாம் ஆசாத்தைத் தந்தது போல், பாப்புவா நியூ கினியாவின் வளர்ச்சிக்கு நாம் சசீந்திரன் முத்துவேலை கொடுத்திருக்கிறோம். சசீந்திரன் முத்துவேல் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டு, பொதுத்துறையின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி எனப் பல துறைகளில் அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்து வருகிறார்.
ஐரோப்பாவில் பிறந்து நம் நாட்டிற்கு வந்து சேவை செய்த அன்னை தெரேசா, ஜெர்மனியில் பிறந்து திருநெல்வேலி பகுதியில் 107 பள்ளிகளைக் கட்டிய சார்லஸ் தியோபிலஸ் ஈவால்ட் ரேனியஸ் (Charles Theophilus Ewald Rhenius), சௌதி அரேபியாவில் பிறந்து இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கும் நம் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட மௌலானா அப்துல் கலாம் ஆசாத், இந்தியாவில் பிறந்து சீன மக்களுக்கு உழைத்த மருத்துவர் துவார்கநாத் கோட்னீஸ் (Dr.Dwarkanath Kotnis) போன்றவர்களைப் பற்றி அறியும் போது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கணியன் பூங்குன்றன் சொன்ன வாக்கு மானுடத்தின் வளர்ச்சிக்கானது!
மேலும் படிக்க சுசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியா நாட்டின் ஆளுநரான சிவகாசி தமிழர்; அசாத்திய கதை!