ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய துறைகளில் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் வகையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் 'அக்னிவீரர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு, விண்ணப்பதாரர்கள் முதலில் உடல் தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். அதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கடைசியாக சி.இ.இ நுழைவு தேர்வு எழுதுவர்.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்திருக்கிறது. புதிய நடைமுறையின்படி, இனி விண்ணப்பதாரர்கள் முதலில் பரிந்துரைக்கப்பட்ட மையங்களில் ஆன்லைன் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அதைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு, கடைசியாக அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், இதுவரை 19,000 அக்னிவீரர்கள் ராணுவத்தில் இணைந்திருக்கின்றனர். மார்ச் முதல் வாரத்தில் 21,000 பேர் ராணுவத்தில் இணையவிருக்கின்றனர். இதில், 2023 - 2024-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர விரும்பும் 40,000 பேருக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ராணுவ உயரதிகாரிகள், ``விண்ணப்பதாரர்களுக்கான நிர்வாகச் செலவுகள் மற்றும் தளவாட ஏற்பாடுகளைக் கருத்தில்கொண்டு, ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய செயல் முறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை கண்காணிக்க வேண்டியிருந்தது. இது நிர்வாகச் சிக்கலுக்கு வழிவகுத்தது. சட்ட ஒழுங்கு நிலையை சமாளிக்க ஏராளமான பாதுகாப்பு பணியாளர்கள் நிறுத்தப்பட வேண்டியிருந்தது.

மேலும் கணிசமான மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால், இந்த புதிய செயல்முறை செலவுகளை கணிசமான அளவு குறைக்கும், நிர்வாக தளவாட சுமையையும் எளிதாக்கும்" என்று தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க அக்னிபத்: `ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்குப் பிறகே, உடற் தகுதித் தேர்வு!' - ராணுவம் அறிவிப்பு