Doctor Vikatan: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி அவசியமா? எந்தெந்தத் தடுப்பூசிகளை எப்போது போட வேண்டும்? தடுப்பூசிகளால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?
- விகடன் வாசகர், இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் ரம்யா ரவி.

கர்ப்பிணிகள் அனைவரும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். அவை தாய்க்குப் பாதுகாப்பு அளிப்பதோடு, குறைமாதப் பிரசவம் நிகழாமலும் காக்கக்கூடியவை.
கர்ப்பம் உறுதியானதும் டெட்டனஸ் டாக்ஸாயிடு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து நான்கு மாதங்கள் கழித்து டெட்டனஸ் டாக்ஸாயிடு பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்.
டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா டாக்ஸைடு தடுப்பூசியை கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுகளை எதிர்க்கக்கூடிய நோய் எதிர்ப்பாற்றலையும் கருவில் வளரும் குழந்தைக்கான பாதுகாப்பையும், பிரசவத்துக்குப் பிறகு குழந்தைக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகளிலிருந்து குழந்தையைக் காப்பாற்றவும் மேற்குறிப்பிட்ட தடுப்பூசிகள் மிகமிக அவசியம்.

எனவே கர்ப்பிணிகளுக்கு இந்தத் தடுப்பூசிகள் குறித்துச் சொல்லப்படாவிட்டாலும், மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, சரியான காலகட்டத்தில் அவற்றைப் போட்டுக்கொள்வது தாய், சேய் நலனைக் காக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: கர்ப்பகால தடுப்பூசிகள் கருவிலுள்ள குழந்தைக்குப் பாதுகாப்பானவையா?