Doctor Vikatan: எட்டு வடிவ நடைப் பயிற்சி எல்லோருக்குமானதா? அதனால் என்ன பலன் ஏற்படும்? பூங்காக்களில் கூழாங்கற்களைப் போட்டு அவற்றின் மேல் நடப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதா?
சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா
எட்டு என்ற எண்ணின் வடிவில் நடப்பது என்பது பல ஆண்டுகளாக, பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மூட்டு பாதிப்பு உள்ளவர்கள் அப்படி நடக்கலாம் என்றும் ஒரு கருத்து மக்களிடம் இருக்கிறது.
வயதாக ஆக நம் எலும்புகளின் ஆரோக்கியம் குறைந்து கொண்டே வரும். எலும்புகளின் மேல் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்கத்தான் அவற்றின் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றன ஆய்வுகள். எட்டு வடிவத்தில் நடக்கும்போது ஒரே நேர்க்கோட்டில் நடக்காமல், வளைந்து நடப்பதால், நடக்கும் திசை மாறுகிறது. அதனால் வேறு திசைகளில் இருந்தும் எலும்புகளுக்கு அழுத்தம் வரத் தொடங்கும்.
நேராக நடக்கும் போதும், குதிக்கும் போதும் மேலிருந்து கீழாக எலும்புகளுக்கு அழுத்தம் வரும். எட்டுவடிவத்தில் நடக்கும்போது கூடுதலாக வேறு திசைகளிலிருந்தும் அழுத்தம் வருகிறது. அது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும் என்கின்றன ஆய்வுகள். அதனால் இந்த வகை நடை பலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கடுமையான மூட்டுவலி உள்ளவர்கள் பொதுவாகவே நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக எட்டு நடையைத் தவிர்ப்பது நல்லது. கூழாங்கற்களின் மேல் நடப்பது என்பது கிட்டத்தட்ட மசாஜ் போன்றது. மசாஜ் என்பது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் ஒரு செயல். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது அது தசைகளுக்கும் சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுக்கும். அதன் விளைவாக தசைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். தசைகள் எலும்புகளோடு இணைந்து, அதனால்தான் எலும்புகள் வேலை செய்கின்றன. எனவே எலும்புகளின் செயல்பாடும் இதனால் மேம்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, புதிதாக நடைப்பயிற்சியை ஆரம்பிக்கப் போகிறவர்கள், அதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்ப பின்னணியில் யாருக்காவது இதய நோய்கள் இருக்கின்றனவா, அதனால் குடும்பத்தில் யாராவது இறந்திருக்கிறார்களா, தலைச்சுற்றல் பாதிப்பு இருக்கிறதா, மூட்டு தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். இவற்றில் ஒன்று இருந்தாலும் மருத்துவரை அணுகி, உடற்பயிற்சிக்குத் தகுதியாக இருக்கிறாரா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு தொடங்குவது பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: எட்டு வடிவ நடை- எல்லோருக்கும் ஏற்றதா?