Doctor Vikatan: காய்ச்சல் தொடங்கி, பல பிரச்னைகளுக்கும் சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்கிறார்களே... அது அவ்வளவு முக்கியமானதா? மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வோர், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சிறுநீரகவியல் மருத்துவர் நிவேதிதா

நம் உடலில் இதயத்துக்கு அடுத்து சிறுநீரகங்கள்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறுநீரைப் பரிசோதிப்பதன் மூலம் உடலிலுள்ள பல பிரச்னைகளைக் கண்டுபிடிக்க முடியும். யூரின் ரொட்டீன் என்ற பரிசோதனையின் மூலம் தொற்று முதல் கற்கள் வரை பல விஷயங்களைக் கண்டுபிடிக்கலாம்.
சிறுநீர்ப் பரிசோதனையின் மூலம் நீரிழிவு நோயைக் கண்டுபிடிக்கலாம். சிறுநீரில் உள்ள புரத அளவை வைத்து சிறுநீரக பாதிப்புகள், சிறுநீரகங்களில் ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா என கண்டறியலாம். சிறுநீரில் கீட்டோன்ஸ் அளவை வைத்து நீரிழிவு பாதிப்பின் தீவிரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
யூரின் ரொட்டீன் எனப்படும் முதல்கட்ட சோதனையிலேயே இத்தனை விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அடுத்த கட்டமாக கிருமித்தொற்று உறுதியானால் கலச்சர் டெஸ்ட்டும், யூரிக் அமிலத்தின் அளவை வைத்து ஸ்கேனும் தேவையா என்பதை மருத்துவர் பரிந்துரைப்பார்.
சிறுநீரகம் தொடர்பான நோய்கள் சமீப காலமாக இள வயதினரிடமும் அதிகரித்து வருவதால் 35 ப்ளஸ் வயதிலிருந்தே வருடம் ஒருமுறை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்வது நல்லது. குறிப்பாக குடும்பப் பின்னணியில் யாருக்காவது சிநுநீரகக் கற்கள், புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்றவை இருந்தால் இன்னும் இள வயதிலிருந்தே டெஸ்ட் செய்து பார்க்கலாம்.

மருத்துவரின் ஆலோசனையோடு அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், சிறுநீர்ப் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனைகள் செய்து பார்க்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: பல பிரச்னைகளுக்கும் சிறுநீர்ப் பரிசோதனையைப் பரிந்துரைப்பது ஏன்?