அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆனால், வெந்தயத்தின் சுவை பெரும்பாலோனோருக்கு பிடிப்பதில்லை. அதே நேரம், மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை களியாக செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இப்போதும் கிராமப்புறங்களில் வாடிக்கையாக இருக்கும் வெந்தயக்களி செய்வதற்கு மிக எளிதான, அதே நேரம் ஆரோக்கியமான உணவு. அதை எப்படி செய்வது என்பதை விளக்குகிறார் மேட்டூரை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் விஜயா.

தேவையான பொருள்கள்
1கப் புழுங்கல் அரிசி
1/4 கப் வெந்தயம்
1/4 கப் உளுந்து (கசப்பு வேண்டாம் என்றால் சேர்க்கவும்)
2 கப் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை
செய்முறை
* புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுந்து ஆகிய மூன்றையும் குறைந்தது 5 மணி நேரம் ஒன்றாக ஊறவைத்து, தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
* பின்பு அடுப்பில், அடி கனமான பாத்திரத்தை வைத்து அரைத்த மாவை அதில் ஊற்றி, குறைவான தீயில் தொடர்ந்து கிளறி விடவும்.
* கிளறக் கிளற மாவு கடினமாக ஆகும். அந்த நேரத்தில், நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும்.
* மாவு களி பதத்திற்கு வந்ததும், அதில் 3 முதல் 5 ஏலக்காய் இடித்துச் சேர்த்துக்கொள்ளவும். கூடவே 2 கப் அளவிற்கு நாட்டுச் சர்க்கரை, அல்லது வெல்லம் கரைத்து சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* களியை இறக்கும் முன் 4 அல்லது 5 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கினால் அருமையான வெந்தயக்களி தயாராக இருக்கும்.

வெந்தயத்தின் பலன்கள்
வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் உடலின் வெப்பத்தை குறைக்க, கேச ஆரோக்கியம் மேம்பட எனப் பல நன்மைகளைத் தரக்கூடியது. அடிக்கடி வெந்தயக் களி செய்து சாப்பிடுவது ஆரோக்கிய உணவாக இருக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும் படிக்க How to: ஆரோக்கியம் தரும் வெந்தயக்களி செய்வது எப்படி? | How To Make Fenugreek Pudding?