சில மனிதர்களுக்கு காலம் தந்த சாளரமற்ற வாழ்வும், அதனை அவர்கள் கையாண்ட விதமும் நம்முள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு கதைதான்... திருச்சியை சேர்ந்த, 75 வயது சீதாலட்சுமி பாட்டியின் கதையும். மற்றவர்களுக்கு நிறைய தன்னம்பிக்கை தரக்கூடிய வாழ்வு அவருடையது.

19 வயதில் திருமணம், 21 வயதில் இரண்டு குழந்தைகளின் தாய், 28 வயதில் கணவன் விரட்டிவிட்ட சோகம்... வாழ்க்கையே முடிந்ததாகப் பலர் கருதும் புள்ளி இது. ஆனால், தன் குழந்தைகளுக்காக வீட்டு வேலை செய்யத் தொடங்கிய சீதாலட்சுமியின் கைகள் இன்றுவரை நிற்காமல் பம்பரமாக சுழல்கின்றன. படிப்பு வாசனையே இல்லாமல், முற்றிலும் கணவனைச் சார்ந்தே வாழ்ந்த பெண், திடீரென தன் வாழ்க்கையின் ஓட்டத்தை வேறு திசைக்கு திருப்பிய தெம்பு... வியப்புக்குரியது.
திருச்சி, பொம்மினி சமுத்திரத்தில் பிறந்த சீதாலட்சுமிக்கு 19 வயதில், அவர் உறவினருடன் திருமணம் நடந்தது. கணவர், வருமான வரித்துறையில் பணிபுரிந்தார். ஆனால் சீதாலட்சுமி தன் எட்டு வயது ஆண் குழந்தை, ஐந்து வயதுப் பெண் குழந்தையோடு வீட்டை விட்டு விரட்டப்பட்டபோது அவருக்கு வயது 25. ``அவரை விட்டு வந்து ஐம்பது வருஷம் ஆயிடுச்சும்மா. என் ஜீவன் இருக்கிற வரையிலும் அவரை பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்" என்கிறார் உறுதியுடன்.

வீட்டை விட்டு வெளியேறிய தருணத்தில் குழந்தைகளுடன் திசையறியாமல் தவித்தபோது, ஒரு பள்ளியில் ஆயாவாக வேலை பார்க்கத் தொடங்கி குடும்பத்தை தாங்கினார். அயராது வீடுகளில் வேலை செய்யத் தொடங்கினார். பிள்ளைகளை தன்னால் முடிந்தவரை படிக்க வைத்தார்.
தற்போது சீதாலட்சுமியின் மகன் திருச்சியிலும் மகள் டெல்லியிலும் வசிக்கின்றனர். நான்கு பேரன், பேத்திகள் உள்ளனர். ``அதான் இப்போ பசங்க வேலை பார்க்குறாங்களே... இன்னும் ஏன் நீங்க வேலை பார்த்து கஷ்டப்படுறீங்க?" என்று கேட்டோம். ‘’நான் வேலைபார்க்கிற வீடுகள்லயும் இதைத்தான் கேட்கிறாங்க. என்னால முடியுற வரைக்கும், என் உடம்புல வலு இருக்குற வரைக்கும் நான் உழைப்பேம்மா. நாளைக்கு என் பிள்ளைங்களே என்னை ஒரு வார்த்தை கேட்டுடக் கூடாதில்ல...’’ என்கிறார் வைராக்கியத்துடன்.
முன்னர் அதிகபட்சமாக 15 வீடுகளில் வேலை பார்த்த இவர், தற்போது 7 வீடுகளில் வேலை செய்கிறார். ``காலையில ஏழு மணிக்கு வேலைக்கு வர்றேன்னு சொன்னா, டான்னு வந்திடுவாங்க" என்கிறார்கள் அவர் வேலைபார்க்கும் வீட்டினர். தான் வசிக்கும் பகுதியில் இருந்து தினமும் 5 கி.மீ நடந்து வேலைபார்க்கும் வாசன் நகர் பகுதிக்கு வந்து தேனீயாகச் சூழலும் இவர், உழைப்பையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளார்.

மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாத போதும்கூட, கடமையை முடித்தே ஆகவேண்டும் என சீறிப் பாய்ந்துவிடுகிறார் சீதாலட்சுமி. இன்று 20 வயதிலேயே வாழ்க்கையை வெறுத்ததாக ஸ்டேட்டஸ் வைக்கும் 2கே கிட்ஸ், ’மண்டே புளூஸ்’ என திங்கட்கிழமை ஆபீஸ் செல்ல அழும் 90’ஸ் கிட்ஸுக்கு எல்லாம்... ஒவ்வொரு நாளும் உழைப்பதற்காகவே என்று தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கும் சீதாலட்சுயை, அவர் ஏரியாவில் ஒரு நம்பிக்கை நாயகியாக அண்ணாந்து பார்க்கிறார்கள். குடும்பத்தை கரையேற்றியதில் காய்த்துப்போன தன் கைகளைத் தேய்த்தபடி சொல்கிறார் அவர், ’‘இந்த உலகத்துல எந்த ஒரு மனுஷனும், மனுஷியும் யாரையும் சார்ந்திருக்கத் தேவையே இல்ல. நம்ம சம்பாத்தியத்துல நம்மளை பார்த்துக்க முடியும். அதுக்கு காசு, பணம், வேலைக்கு சிபாரிசுனு எதுவும் வேணாம்... உழைக்கத் தயாரா இருக்குற ஒடம்பு மட்டும்போதும்!”
வொண்டர் வுமன்!
மேலும் படிக்க 28 வயதில் குடும்ப வன்முறை, 75 வயதில் நம்பிக்கை மனுஷி - சீதாலட்சுமி பாட்டியின் கதை!