சென்னையை அடுத்த ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி பெரியார் நகர் 9-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்துவருபவர் விஜயலட்சுமி (20). இவர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 2.3.2023-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த வருண் என்பவரை நான் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்தேன். கடந்த ஜூன் மாதம் நான் கர்ப்பமடைந்தேன். அதனால் வருண் என்னை மீனம்பாக்கம் சந்தியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். ஜூலை மாதத்தில் எனக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு யாதவ் (8 மாதம்) எனப் பெயர் வைத்தோம்.

இந்த நிலையில் கடந்த 11.11.2022-ம் தேதி வருண் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நானும் அவரும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தோம். பின்னர் மறுநாள் (12.11.2022) குழந்தையை வருணின் தோழி ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு வருணின் வீட்டுக்குச் சென்றோம். அதன் பிறகு குழந்தையைக் காணவில்லை. எனவே, என் மகனைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.
குழந்தையைக் கண்டுபிடிக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் மூர்த்தி மேற்பார்வையில் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன் கண்காணிப்பில் மணிமங்கலம் உதவி கமிஷனர் ரவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகிதா அண்ண கிறிஸ்டி , சிவக்குமார் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 3.3.23-ம் தேதி மாடம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் வருண் சரணடைந்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் வருணைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார், ``வருணுக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் நடந்த தகவலை பெற்றோரிடம் அவர் மறைத்திருக்கிறார். இதற்கிடையில் குழந்தையும் பிறந்துவிட்டதால் வருண், மனைவி விஜயலட்சுமிக்குத் தெரியாமல் குழந்தையைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன்படி கடந்த 12.11.2022-ம் தேதி மதியம் மனைவி விஜயலட்சுமிக்குத் தெரியாமல் தன்னுடைய தோழியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

பின்னர் குழந்தை யாதவை தூக்கிக்கொண்டு பெருமாட்டு நல்லூர் அருகிலுள்ள சுடுகாட்டுக்குச் சென்று குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார். பின்னர் அங்குள்ள புதரில் குழந்தையை வீசிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், இந்தத் தகவலை மனைவி மற்றும் யாரிடமும் வருண் சொல்லவில்லை. குழந்தையைக் கொலைசெய்த குற்றத்துக்காக வருணைக் கைதுசெய்து சிறையில் அடைத்தோம். மேலும், சம்பவம் நடந்த சுடுகாட்டுக்கு அவரை அழைத்துச் சென்று பார்த்தபோது அங்கு குழந்தை அணிந்திருந்த வளையல், குல்லா, மெத்தை ஆகியவை இருந்தன. இதையடுத்து தடய அறிவியல் துறையினர் அங்கு வந்து குழந்தையின் எலும்பை சேகரித்தனர்" என்றனர்.
மேலும் படிக்க திருட்டுத் திருமணம்; 8 மாதக் குழந்தையைக் கொலைசெய்த தந்தை - போலீஸில் சிக்கிய பின்னணி என்ன?!