விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம். விழுப்புரம் எம்.ஜி சாலையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். தனது வீட்டுக்கு மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக நேற்று மாலை, தான் வேலை பார்க்கும் அந்த பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு போதையில் வந்த 2 வாலிபர்கள், அங்காடி அருகே தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். இதைப் பார்த்த இப்ராஹிம், அந்த இளைஞர்களிடம் சென்று, `ஏன் இங்கே தகராறு செய்து கொண்டிருக்கிறீர்கள்' எனக் கேட்டிருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும், இப்ராஹிமை அங்காடிக்குள் தள்ளி கொடூரமாகத் தாக்கியதோடு, தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரின் வயிற்றில் குத்தினர். இதனால் அதீத ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், அதே இடத்தில் இப்ராஹிம் மயங்கி விழுந்தார். அதேபோல், தீபக் என்பவரையும் தாக்கி முகத்தில் கிழித்திருக்கின்றனர். இருவரைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற இரு இளைஞர்களை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர்.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார், இப்ராஹிமை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இப்ராஹிம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தங்கும் விடுதி ஒன்றிற்குச் சென்ற இந்த இளைஞர்கள், அங்கிருந்த மேலாளர் சங்கர் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு, சங்கரின் கன்னத்தில் கத்தியால் குத்தி கிழித்துவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதை வீடியோவாகப் பதிவுசெய்தவர்களையும் மிரட்டிய இருவர், இருசக்கர வாகனத்தில் கிளம்பி, வழிகளில் எண்ணெய்கடை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்னை செய்தபடியே அங்காடி பகுதிக்கு வந்திருக்கின்றனர்.

இதையடுத்து, குற்றச்செயலில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த இருவரும் விழுப்புரம் - பெரியகாலனி ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த ஞானசேகரனின் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த இளைஞர்களின் தந்தை ஞானசேகரனுக்கு விழுப்புரம் பெண் ஒருவருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருந்ததாம்.
இந்த விவரம் ராஜசேகர், வல்லரசுவுக்குத் தாய் மூலமாக தெரியவந்திருக்கிறது. எனவே, இது பற்றி பழக்கடை நடத்திவரும் தங்கள் தந்தையிடம் கேட்பதற்காகவும், அந்தப் பெண்ணை நேரில் கண்டிப்பதற்காக எம்.ஜி சாலை பகுதிக்கு இருவரும் வந்தனராம். அப்போது, அங்குப் பிரச்னையில் ஈடுபட்ட போதுதான்... இப்ராஹிம், தீபக் ஆகியோர் தலையிட்டு பிரச்னையை சமாதானப்படுத்த முயன்றனராம். இதில் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே இளைஞர்கள் இருவரும் இப்ராஹிமை கொடூரமாகத் தாக்கி, கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கின்றனர் என்பது தெரியவந்திருக்கிறது.

பட்டப்பகலில் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அங்காடியில் இப்ராஹிமை இளைஞர்கள் தாக்கும் சி.சி.டி.வி காட்சிகளும், கத்தியால் குத்துப்பட்ட அப்பாவி நபர் கீழே சரிந்து விழும் காட்சிகளும் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன. சீரான இடைவெளியில் விழுப்புரம் நகரத்திற்குள்ளாகவே பல இடங்களில் இந்த இளைஞர்கள் பிரச்னையில் ஈடுபட்டிருக்கும் போதிலும் காவல்துறை இறுதிக்கட்டமாகவே சம்பவ இடத்துக்குச் சென்றிருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இந்தக் கொலைச் சம்பவத்தை கண்டித்து, விழுப்புரத்தில் உள்ள அனைத்து வணிக கடைகளும், ஹோட்டல்களும் இன்று (30.03.2023) காலை முதல் மாலை 4 மணி வரை முழுமையாக கடை அடைப்பு செய்திட `சேம்பர் ஆஃப் காமர்ஸ்' மூலம் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க தந்தையின் திருமணம் மீறிய உறவு? - போதையில் பிரச்னை செய்த மகன்கள்; அப்பாவி இளைஞர் குத்திக் கொலை!