தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில், பலர் தங்களது பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதன் காரணமாக, அத்தகைய விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் நோக்கோடு, அவசர தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசிடம் சில விளக்கங்களை கேட்டு கொண்டார். எனினும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்றும் விளக்கமளித்தார். இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்தது. இந்தநிலையில், ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
இது குறித்து ஆளுநர் தரப்பு ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான தனது நிலைப்பாட்டை தெரிவித்திருப்பதாக அரசு வட்டாரங்கள் சில தகவல்களை தெரிவித்திருக்கின்றன. அதில், மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களாக, ``ஒரு நபரின் திறமையை கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19(1) g பிரிவின் கீழ் அவரின் அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எனவே, அடிப்படை உரிமைக்கு எதிராக எந்த அரசும் சட்டமியற்ற முடியாது.
சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையத் தொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது.
இத்தகைய மசோதா மத்திய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால், அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும். எனவே, அத்தகைய சட்டத்தை மாநில அரசால் தனித்து நிறைவேற்ற முடியாது. மேலும், இந்த மசோதா உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாக அமையும். எனவே, இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்களால் பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும்.
இந்த விஷயங்களை ஏற்கெனவே தெளிவுபடுத்தி அறிவுறுத்திய பிறகும், மாநில அரசு முன்பு அவசர சட்டத்தில் நிறைவேற்றிய அதே அம்சங்களையே ஆளுநருக்கு அனுப்பியுள்ளது" என்று ஆளுநர் கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், ஆளுநர் தரப்பு அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் - சொல்லும் காரணங்கள் என்னென்ன?!