``எடப்பாடி பழனிசாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் அ.தி.மு.க செல்வாக்கை இழந்து கொண்டே வரும்" என தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார். பின்னர் தஞ்சாவூர் வந்த அவர் சசிகலா கணவர் ம.நடராசனின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விளார் கிராமத்தில் உள்ள அவரின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ``தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என தி.மு.க அறிவித்திருந்தது. ஆனால் தற்போதை பட்ஜெட்டில் தி.மு.க அரசு தகுதி அடிப்படையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது அது என்ன தகுதி என தெரியவில்லை. மக்களிடம் ரூ.1,000 குறித்து கேள்வி எழுந்ததை சமாளிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது உண்மையில் மனதில் இருந்து வந்ததாக தெரியவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வருவோம் என்றனர். அது தொடர்பான அறிவிப்பும் இல்லை. தேர்தல் அறிக்கையில் கூறியது குறித்து எந்த அறிவிப்பு இல்லை. அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் தான் அரசாங்கம் நடந்துக்கொண்டு இருக்கிறது. பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுள்ளதாக தெரிகிறது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், ப்ளஸ் 2 தேர்வு எழுதாத நிலையில், அந்த மாணவர்கள் ஐ.டி.ஐ, பாலிடெக்கனிக் படிக்க சென்று விட்டதாக கூறும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதற்கான ஆவணங்களை வெளியிட வேண்டும். 2017-ம் ஆண்டு தர்மயுத்தம் நடத்தியதை தவறு என தற்போது ஓ.பி.எஸ் உணர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் அதுதான் எனது கருத்தும்.

மேற்கு மண்டலம் எங்களது கோட்டை என கூறி வரும் எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னம் இருந்தும், ஆளும் கட்சிக்கு நிகராக செலவு செய்தும், மக்கள் மத்தியில் தி.மு.க அரசு மீது அதிருப்தி இருந்தும் ஈரோடு கிழக்கில் கோட்டை விட்டுள்ளார். இரட்டை இலை இருக்கிறது. பங்காளிகள் சம்பாதித்து வீட்டில் வைத்துள்ளதை எடுத்து செலவு செய்தனர் இதை எல்லாம் பார்த்த போது, தி.மு.க., சுமார் 20 ஆயிரம் ஓட்டுகளில் வெற்றி பெறும் என நினைத்தேன்.
ஆனால், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.விடம் படுதோல்வி அடைந்தது அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் இருந்தும், அ.தி.மு.க பலவீனம் அடைந்துள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது. எடப்பாடி பழனிசாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் அ.தி.மு.க செல்வாக்கை இழந்து கொண்டே வரும். இரட்டை இலை தீயவர்கள் கையில் உள்ளது. அ.ம.மு.க பாராளுமன்ற தேர்தலை நோக்கி பயணிக்கிறது” என்றார்.
மேலும் படிக்க ``தர்மயுத்தம் நடத்தியதை தவறு என தற்போது ஓ.பி.எஸ் உணர்ந்துள்ளார்” - சொல்கிறார் டி.டி.வி.தினகரன்