முதலீடுகளில் அதிக ரிஸ்க் ஆனது என்றால் பங்குச் சந்தையை குறிப்பிடலாம். இதனால், இந்த முதலீட்டில் ஒருவர் மொத்தப் பணத்தையும் போட்டால் அதிக மூலதன இழப்பை சந்திக்க கூடும். ஒருவர் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு பொதுவான விதிமுறை மற்றும் பார்முலா இருக்கிறது.

பங்குச் சந்தை முதலீட்டு பார்முலா..!
ஒருவரின் வயதை 100-லிருந்து கழித்து வரும், எண்ணை சதவிகிதமாக பாவித்து, அவரின் மொத்த முதலீட்டு தொகையில், அந்தத் சதவிகிதத்தைதான் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் போட வேண்டும். இங்கே பங்குச் சந்தைச் சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் என்பது பாம்பே பங்குச் சந்தை (பி.எஸ்.இ), தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) போன்ற பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து திரப்பட்டப்படும் முழுக்க முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களை குறிக்கும்.
இதனை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் சுலபமாக விளங்கிக் கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஒருவரின் வயது 30 என்று வைத்துக் கொள்வோம். அவர் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் 100-30 = 70% முதலீடு செய்ய வேண்டும். 30 வயதான இவர் ரூ. 10 லட்சத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், ரூ.7 லட்சத்தை மட்டுமே பங்குச் சந்தை சார்ந்த நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும். அவர் நிறுவனப் பங்குகளில் ரூ. 3 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், மீதி ரூ. 4 லட்சம் மட்டுமே பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும். அவர் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால் ரூ. 7 லட்சத்தையும் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்துவிடலாம்.

மீதி இருக்கும் ரூ.3 லட்சத்தை தேவையை பொறுத்து தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம்.
இங்கே ரூ. 10 லட்சத்துக்கான முதலீட்டுக் காலம் என்பது முதலீட்டாளரின் முதலீடு செய்யும் தகுதிக்கு ஏற்ப ஓராண்டு தொடங்கி, ஐந்து ஆண்டுகள், பத்தாண்டுகள், 20 ஆண்டுகள் வரை கூட இருக்கலாம். அதேநேரத்தில் ஐந்தாண்டுகளுக்கு குறைவான காலத்தில் தேவைப்படும் பணத்தை இப்படி பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது; அது அதிக ரிஸ்க்கானது ஆகும்.
ரிஸ்கை மேலும் குறைக்க..!
இந்த வயதுக்கு ஏற்ற முதலீட்டை இன்னும் சற்று விரிவாக பார்ப்போம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் 30 வயதான ஒருவர் ரூ.7 லட்சத்தை பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்யும் போது, அவர், அந்தப் பணத்தை மொத்தமாக ஒரே ஃபண்ட் வகையிலோ, ஒரே ஃபண்ட் திட்டத்திலோ முதலீடு செய்தால் ரிஸ்க் மிக அதிகமாக இருக்கும். அவர் ரிஸ்கை குறைக்க அந்தப் பணத்தை லார்ஜ் கேப் ஃபண்ட்கள், மல்டி கேப் ஃபண்ட்கள், ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்களில் பிரித்து முதலீடு செய்யலாம். அதுவும் முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் இருக்கும்பட்சத்தில்தான்.

அதிக வருமானம் எதிர்பார்த்து துறை சார்ந்த பார்மா ஃபண்ட்கள், ஐ.டி ஃபண்ட்கள், இன்ஃப்ரா ஃபண்ட்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது என்றால் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் பணத்தில் சுமார் 10 சதவிகிதத்துக்குள் மட்டுமே முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். இங்கே ரூ.7 லட்சம் பங்குச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கும் நிலையில் இதில் 10% அதாவது ரூ.70,000-ஐ மட்டுமே செக்டார் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும். இங்கே ஒரு விஷயத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட துறைகள் பற்றி நன்றாக தெரியும்பட்சத்தில் மட்டுமே செக்டார் ஃபண்ட்களில் பணத்தை போட வேண்டும். ஒரே ஒரு குறிப்பிட்ட செக்டார் ஃபண்டில் மொத்தமாக போடுவதற்கு பதில் பல்வேறு செக்டார் ஃபண்ட்களில் பிரித்து முதலீடு செய்வது ரிஸ்கை குறைப்பதோடு லாபகரமாகவும் இருக்கும்.
நவீன முதலீடுகள்..!
மீதி இருக்கும் ரூ.3 லட்சத்தை தேவையை பொறுத்து தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம் என சொல்லி இருந்தோம். தங்கம் என்கிற போது தங்க நகையை தவிர்த்து டிஜிட்டல் தங்கத் திட்டங்களான கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப், கோல்டு பாண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இப்படி செய்யும் போது பாதுகாப்பு பிரச்னை கிடையாது. மேலும், செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி வரி போன்ற செலவுகளும் குறையும்.

ரியல் எஸ்டேட் என்கிற போது இன்றைக்கு மனை மற்றும் சொத்தின் விலை மிகவும் எகிறி கிடக்கிறது. அந்த அளவுக்கு லட்சக்கணக்கான பணம் அனைத்து மக்களிடமும் இருக்கும் என சொல்ல முடியாது. அது போன்றவர்கள் ரெய்ட்ஸ் (REITs - real estate investment trusts)-களில் முதலீடு செய்து வரலாம். இந்த முதலீட்டில் ஆண்டுக்கு சுமார் 8 சதவிகித வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பங்குச் சந்தையில் ஒருவர் அதிகபட்சம் முதலீடு செய்யலாம் என்பதற்கான பார்முலாவை தெரிந்து கொண்டிருப்பீர்கள். இதில் 5-10% முன் பின் இருக்கலாம். இது தவிர பங்குச் சந்தை பற்றி நல்ல அறிவு மற்றும் திறமை இருப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க கூடியவர்கள் இதனை விட அதிகமாக கூட முதலீடு செய்து லாபம் ஈட்டலாம்.
மேலும் படிக்க பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? லாபத்துக்கு வழிகாட்டும் பக்கா விதிமுறைகள்..!