இலங்கை திரிகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் முஸ்தபா. இவரின் மகன் ரசாக் (எ) ரியாஸ் கான், (39). பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரியாஸ் கான் மீது தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரியாஸ் கான், மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக மதுரை நீதிமன்ற விசாரணைக்காக போலீஸாரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மதுரை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து சென்னைக்கு மீண்டும் அழைத்து சென்ற நிலையில், விக்கிரவாண்டி பைபாஸ் சாலையில் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வேனை நிறுத்தியுள்ளனர். அப்போது கை கழுவ செல்வதாக கூறி ஹோட்டலுக்கு பின்புறம் வழியாக ரியாஸ் கான் தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் இவரை சென்னை மற்றும் மதுரை போலீஸார் தேடி வந்த நிலையில், ராமேஸ்வரம் கடற்கரை வழியாக இலங்கைக்கு ரியாஸ் கான் தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதாக போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரைக்கு தகவல் தெரிவித்தனர். அவரின் உத்தரவின் பேரில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் போலீசார் கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்தினர்.
அப்போது பாம்பன் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இலங்கையை சேர்ந்த வாலிபர் சுற்றித்திரிவதாக மீனவர்கள் மூலம் மண்டபம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் விக்கிரவாண்டியில் போலீஸாரிடம் இருந்து தப்பி வந்த கைதி என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க விக்கிரவாண்டியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய இலங்கை கைதி - ராமநாதபுரத்தில் சிக்கியது எப்படி?!