பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவது குறித்து தெரிவித்த கருத்துக்காக, டெல்லி காவல்துறை ராகுலின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்தியிருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரத் ஜோடோவில் என்ன பேசினார் ராகுல்காந்தி:
கடந்த ஜனவரி 30-ம் தேதி காஷ்மீர் தலைநகர் ஶ்ரீநகரில் ராகுல்காந்தி தனது இறுதிகட்ட பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல், ``நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்திருக்கிறது. ஊடகங்கள் இதனை பற்றி பேசுவதே இல்லை. நான் யாத்திரை மேற்கொள்ளும்போது என்னை சந்தித்தப் பெண்கள் பலர், தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து அழுகையுடன் கூறினர். நான் அவர்களிடம், காவல்துறையினரிடம் சென்று புகார் கொடுக்கும்படி கூறினேன். ஆனால், அவர்களோ `தாங்கள் காவல்துறைக்குச் சென்றால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும், திருமணம் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும் எனக்கூறி, என்னையும் காவல்துறையிடம் சொல்லவேண்டாம் எனத் தெரிவித்தனர்" எனக் கூறினார்.
டெல்லி போலீஸ் தீவிரம்:
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு தொடர்பாக டெல்லி காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இது சம்மந்தமானக் கேள்விகளை அனுப்பி விளக்கம் தரவேண்டும் எனவும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் ராகுல் காந்தி தரப்பிலிருந்து பதில் ஏதும் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா(Sagar Preet Hooda) தலைமையிலான காவல்துறையினர் டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டிற்கு நேற்று அதிரடியாகச் சென்றனர். அங்கு, ராகுல் காந்தியை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். அதேசமயம் காவல்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தியின் வீட்டுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணை முடிவடைந்த பின்னர் பத்திரிகையாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த காவல் ஆணையர் சாகர் பிரீத், ``கடந்த மார்ச் 15-ம் தேதியன்றே ராகுல் காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அன்று தொடர்புகொள்ள முடியாத பட்சத்தில் அடுத்த நாளும் முயற்சித்தோம். பின்னர் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், ராகுல் காந்தி தரப்பிலிருந்து உரிய பதில் ஏதும் வரததால், நேரடியாக அவரிடம் சென்று விசாரணை நடத்த முடிவெடுத்தோம். அதனடிப்படையில், இன்று அவரின் இல்லத்துக்குச் சென்று சந்தித்தோம். பாதயாத்திரையின்போது பெண்கள் வன்கொடுமைகள் தொடர்பாகப் பேசியது குறித்த விவரங்களைக் கேட்டோம். அவரும் அதுதொடர்பான தேவையான விவரங்களை அளிப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும், அதற்கு கால அவகாசமும் கேட்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
மேலும், ``இதுதொடர்பாக நாங்கள் அளித்த நோட்டீஸை ராகுல் காந்தியின் அலுவலகத்தினர் பெற்றுக் கொண்டனர். உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பது தெரிந்தால்தான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை எங்களால் அளிக்க முடியும். ராகுல் காந்தியிடமிருந்து விவரங்கள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வோம்!" என ஆணையர் சாகர் பிரீத் கூறினார்.

கண்டனம் தெரிவித்த காங்கிரஸ்:
டெல்லி காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ``இந்திய ஒற்றுமை யாத்திரை முடிந்து 45 நாட்கள் ஆகிவிட்டன. உண்மையிலேயே டெல்லி காவல்துறையினருக்கு அக்கறை இருந்திருந்தால், இத்தனை நாள்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள்? ஏன் அவர்கள் கடந்த மாதமே விசாரணை நடந்த வரவில்லை? டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சட்டப்படி உரிய பதிலை அளிக்கும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அஷோக் கெலாட், ``சரியான காரணமின்றி ராகுல் காந்தியின் வீட்டிற்கு டெல்லி காவல்துறை சென்றிருக்கிறது என்றால் அது அமித் ஷாவின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் தொடர்பாக அவர் விரைவில் பதிலளிப்பார். ஆனால், தற்போதே ஏன் காவல்துறை அவரின் வீட்டிற்குச் செல்ல வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதேபோல காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``அதானி விவகாரத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளால் அச்சம் கொண்ட மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையில் களமிறங்கியிருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை முடிந்து 45 நாள் கழித்து ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். ஜனநாயகம், பெண்கள் மேம்பாடு, கருத்து சுதந்திரம், எதிர்க்கட்சி ஆகியவற்றை பலவீனமாக்கவே மத்திய அரசு இதுபோன்று செய்கிறது!" எனக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.
மேலும் படிக்க ராகுல் காந்தி விட்டுக்குள் புகுந்த போலீஸ்: `விசாரணையா... மிரட்டலா?’ - கொதிக்கும் காங்கிரஸ்