மதுரை தெற்கு மாவட்டத்தில், கடந்த மார்ச் 7-ம் தேதி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில், `மதுபான விற்பனை குறைந்தது ஏன்?' என்பது தொடர்பாக பேசப்பட்டு, அதை அதிகரிப்பது குறித்தான சுற்றறிக்கை அனைத்து மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியானதாக சொல்லப்படும் சுற்றறிக்கையில், ``கடந்த மாதம் முதல் மார்ச் 6-ம் தேதி வரை இந்தியாவில் உருவாகும் மதுபானத்தின் விற்பனை வளர்ச்சி வீதம் 15% மற்றும் பீர் வகைகளுக்கு 27% வளர்ச்சி விகிதமாக இருக்கிறது. விற்பனை சதவீதம் அதிகரிக்க அதிக அளவில் விற்பனையாகும் மதுபானங்கள் வகைகள் வாங்கிய பிறகும், ஏன் வளர்ச்சி விகிதம் குறைகிறது?.
மதுரை தெற்கு தாலுகா வாரியாக ஆய்வு செய்ததில் கிராமப் புறங்களில் விற்பனை குறைந்திருக்கிறது. அப்பகுதி விற்பனையாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கடந்த ஆண்டை ஓப்பிடும் போது விற்பனை வளர்ச்சி குறைவாக இருப்பதால் விற்பனையை அதிகரிக்க அனைத்து மதுபான வகைகளும் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு படும்படி வைக்க வேண்டும்.
குறிப்பாக, புதிய மதுபான வகைகளை வாடிக்கையாளர்களும் பார்வைக்கு படும்படி வைத்திட வேண்டும். மேலும், 90 நாள்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அனைத்து மதுபானங்களையும் விற்பனை செய்து முடிக்கவும். அரசு மதுபான கடைகளுக்கு அருகில் மனமகிழ் மன்றங்கள்(FL2) அமைக்கப்பட்டருந்தால், அங்கு அதிகம் விற்பனையாகும் மதுபான வகைகளை தனி கவனத்துடன் தேவைப்பட்டியலில் இணைத்து வாங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திருச்செல்வனிடம் பேசிகையில், ”இதேபோல், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலத்திலும் சுற்றறிக்கை வந்தது. தற்போது, மதுரையில் இதேபோன்று அறிவிப்பு வந்திருக்கிறது. அதில், ’90 நாள்ளுக்கு மேல் கடைகளில் விற்பனையாமல் இருக்கும் மதுபானத்தை விற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒரு பீரின் தரம் நீடிப்பது 60 நாள்கள் தான். அது கடந்துவிட்டால் அதன் தன்மை மாறி உடல் உபாதைகளை ஏற்படுத்தும். தவிர, விற்பனை குறையும்போது ஊழியர்களைக் கேள்வி கேட்கும் நிர்வாகம், தொழிலாளர் பாதுகாப்புக்கு என்ன செய்தது என்னும் கேள்வியைக் கேட்க வேண்டும்.

காரணம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் டாஸ்மாக் ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் ஊழியர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு 80% தீ காயத்துடன் உயிருக்குப் போராடி வருகிறார். அவர்களை நிர்வாகியோ, அமைச்சரோ சென்று பார்கிறார்களா… வேறு எந்தத் துறையிலாவது இது நடக்குமா…அரசு உடனிருக்கும் என நினைக்கிறார்கள் . ஆனால் அரசு யார் மீதும் அக்கறையுடன் இருப்பதில்லை. அவர்களுக்கு தேவை வருவாய் மட்டுமே. அதைத் தான் இந்த அறிவிப்பு காட்டுகிறது.” என்றார்.
மேலும் படிக்க `மதுபான விற்பனை குறைந்தது ஏன்... அதிகரிக்க என்ன செய்யலாம்?’ - ஆய்வுக்கூட்டம் நடத்தியதா டாஸ்மாக்?!