பதினெண் சித்தர்களில் முக்கியமானவரான ராமதேவ சித்தரின் குருபூஜை வருகின்ற 7-ம் தேதி நடைபெற உள்ளதால் அழகர்மலை மீதிருக்கும் ஜீவசமாதியிலும், அடிவாரத்தில் பக்தர்கள் எழுப்பியுள்ள கோயிலிலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அழகர்மலை மீது உள்ள ராமதேவ சித்தரின் ஜீவ சமாதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே பக்தர்கள் ஆண்டுக்கொரு முறை மட்டுமே அங்கு சென்று தரிசிக்க முடியும்.
அவரை தினமும் தரிசிக்க விரும்பிய பக்தர்கள் ஒன்று சேர்ந்து அழகர்மலைக்கு கீழே சில இடங்களில் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்கள். அதில், அ.வலையப்பட்டியில் கட்டப்பட்டுள்ள ராமதேவர் கோயில் முக்கியமானது.

சைவமும் வைணவமும் இயற்கையோடு இணைந்த ஆன்மிக தலம் அழகர்மலை. கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாளும், சோலைமலை முருகனும் வீற்றிருக்கும் இந்தப் புண்ணிய தலத்தில் ஆதி காலத்தில் சித்தர்கள் வாழ்ந்து வந்தனர் என்பது நம்பிக்கை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரபு தேசமெல்லாம் சென்று ஆன்மிகம், தத்துவம், மருத்துவ அற்புதங்களை அறிந்து வந்தவர் ராமதேவர். இவரே சதுரகிரி மலையில் இரட்டை லிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர். அதன்பிறகு சிலகாலம் அழகர்மலைக்கு வந்து தவத்தில் ஈடுபட்டுப் பிறகு ஜீவசமாதியடைந்தார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அழகர்மலை மீது நூபுரகங்கையைக் காவல்காக்கும் ராக்காயி அம்மன் கோயிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரம் மலையேறினால் ஸ்ரீராமதேவர் ஜீவசமாதிக்கு வந்துவிடலாம். வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இப்பகுதிக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் குருபூஜைக்காக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அழகர்மலையின் அடிவாரத்தில் அ.வலையப்பட்டியில் அமைந்திருக்கும் ராமதேவர் ஆலயத்திலும் குருபூஜையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ஆண்டுதோறும் குருபூஜையின்போது அன்னதானம், திருவிளக்கு பூஜை என ராமதேவரின் பக்தர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
குருபூஜையின் சிறப்புகள் குறித்து நம்மிடம் பேசிய ராஜ்குமார் மற்றும் கோயிலை நிர்வகித்து வரும் அடியார்கள், "ராமதேவர் சித்தரின் அருளைப் பெற விரும்பும் மக்களால் மலை மீதூள்ள அவரின் ஜீவசமாதிக்கு ஆண்டுக்கொருமுறைதான் செல்ல முடியும். பலபேரால் மலையேறிச் செல்ல முடிவதில்லை. அவர்களின் ஆசையை, பக்தியை மதிக்கும் வகையில் இங்கு ராமதேவருக்குக் கோயில் எழுப்பப்பட்டது.
இயற்கை எழில் சூழ, திருவோடு, கடுக்காய், ருத்திராட்சம், கடம்பம், தான்றிக்காய், மருதம், மலைவேம்பு, சந்தனம் என நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்களுக்கு நடுவே ராமதேவரின் கோயில் அமைந்துள்ளது. அழகர் கோயில், ராமதேவரின் ஜீவசமாதி, ராமதேவர் கோயில் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் வடமேல் பகுதியிலிருந்து பார்த்தால் மலையின் மேல் ராமதேவர் தவம் செய்த சாமிக்கல் என்ற இடம் தெரியும். கோயிலில் வடகீழ் பகுதியிலிருந்து ஜீவசமாதி அமைந்திருக்கும் மலையின் உச்சியைப் பார்க்கலாம்.
இக்கோயிலில் பிலாவடி கருப்பணசுவாமி சந்நிதி உள்ளது. அதைத் தொடர்ந்து ஞானக் கற்பகம் சந்நிதி. இரண்டு சந்நிதிகளிலும் வழிபட்டுப் பின்பு பகவான் ராமதேவர் சந்நிதியில் தரிசனம் செய்து பிரணவ வடிவில் வலம் வந்து தல விருட்சமான மருதமரத்தை வணங்க வேண்டும். பிறகு பட்டினத்தார் சந்நிதியில் வழிபடவேண்டும்.

இங்கு தியானம் செய்பவர்களுக்காகத் தனி மண்டபம் உள்ளது. அங்கு அணையா விளக்கும் பதினெண் சித்தர்களின் திரு உருவங்களும் மகா வாக்கியமும் பார்க்கும் வகையில் உள்ளன. தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடை திறந்திருக்கும். கோமாதா முன்னிலையில் நடை திறக்கப்பட்டு 8.30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
இங்கு சித்தர்கள் தவத்தில் இருப்பதால் தேங்காய் உடைப்பது, மணி அடிப்பது போன்று எந்தச் சத்தமும் எழுப்பவது கூடாது. வியாழக்கிழமைகளில் மட்டும் ராமதேவருக்கு அபிஷேகம் நடைபெறும்.

மாசி மாதம் பூரம் நட்சத்திர நாளில் குருபூஜை சிறப்பாக நடைபெறும். இதில் கலந்துகொள்ளப் பல பகுதியிலிருந்து பொதுமக்களும் வட மாநிலங்களில் இருந்து சாதுக்களும் வருகை தருவார்கள். இதேபோன்று ஆடி மாதத்தில் பட்டினத்தாருக்கு குருபூஜை நடைபெறும்" என்றனர்.
மேலும் படிக்க ராமதேவ சித்தர் குருபூஜை: வருகை தரவுள்ள தமிழக பக்தர்கள், வடமாநில சாதுக்கள்! விழாவின் சிறப்புகள் என்ன?