தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை முதலில் பேச வரும்படி அமைச்சர் மனோதங்கராஜ் அழைத்தார். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் மைக்கைப்பிடித்து பேச தொடங்கினார். பினராயி விஜயன் சிறப்பு விருந்தினர் என்பதால் அவரை சிறப்பு பேச்சாளராக, இறுதியாக பேசவைப்பதற்காக ஸ்டாலின் அப்படி செய்துள்ளதாக திமுக-வினரால் கூறப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றாகப் பதிவாகி இருக்கக்கூடிய தோள்சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மிகுந்த பெருமைப்படுகிறேன்.
சனாதன சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக சமூகநீதிக்கு வித்திட்டது தோள் சீலைப் போராட்டம். எத்தகைய இழிநிலை இந்த நாட்டில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. வீரமிக்க போராட்டத்தின் காரணமாக அந்த இழிநிலை அடித்து நொறுக்கப்பட்டது. அதை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்காகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், நாகரிகத்தில், தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களைத் தொட்டுவிட்டது.
இப்படிப்பட்ட உயரத்தில்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தோமா என்றால், இல்லை. ஒரு காலத்தில் அனைத்து உணவு விடுதிக்குள்ளும் அனைவரும் போக முடியாது. பஞ்சமர்களும், குஷ்டரோகிகளும் உள்ளே வரக்கூடாது என்று போர்டு மாட்டி இருப்பார்கள். நாடகக் கொட்டகைகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ரயில் நிலையங்களில் உயர்சாதியினர் சாப்பிடத் தனி இடம் இருந்தது. ரயில் விட்டபோது ஒவ்வொரு வர்ணத்துக்கும் தனித்தனியாக பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தார்கள். 80 வயதைக் கடந்த பெரியவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்குத்தான் தமிழ்ச் சமுதாயத்தில் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நடந்திருக்கக்கூடிய மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம் இப்போது இப்படி உயர்ந்திருக்கிறோம் என்பது தெரியும்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார், 1924-ம் ஆண்டு வைக்கத்துக்குப் போய் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். அதில் அனைவரும் கைதான பிறகு, இந்தப் போராட்டம் நின்று விடக் கூடாது என்ற நோக்கத்தோடு, பெரியார் வைக்கம் சென்று போராடினார். மனைவி நாகம்மையாரையும் போராட்டத்துக்கு அழைத்து வந்தார். தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களை அழைத்து வந்து போராடினார். இறுதியில் வெற்றியும் பெற்றார்.
அந்தப் போராட்டம்தான் எனக்கு ஊக்கமளித்த போராட்டம் என்று அம்பேத்கர் எழுதி இருக்கிறார். அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம். அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானாக எதுவும் மாறிவிடவில்லை. நமது தலைவர்களால், நமது முன்னோடிகளால், அவர்களது போராட்டங்களால், தியாகங்களால்தான் அனைத்தும் மாறி இருக்கிறது. சமூக அழுக்குகளை சட்டத்தாலும் மாற்ற வேண்டும். மனமாற்றத்தாலும் மாற்ற வேண்டும். அரசுகள் சட்டம் போட வேண்டும். சீர்திருத்த எண்ணம் கொண்டவர்கள் இது போன்ற விழாக்களின் மூலமாக மனமாற்றங்களை உருவாக்க வேண்டும்.
ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் மொத்தமாகத் துடைத்துவிட முடியாதுதான். ஆனாலும் நமது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்வோம்.
'தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்' - என்ற அய்யா வைகுண்டரின் முழக்கத்தை எந்நாளும் எதிரொலிப்போம்" என்றார்.

பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "கேரளத்தில் மார் மறைக்கும் சமரமும், தமிழ்நாட்டின் தோள்சீலை போராட்டமும் ஒன்றுதான். விலக்கி நிறுத்தப்பட்ட பெரிய அளவிலான மக்கள் நம் நாட்டில் உண்டு. நிறைய சமூகத்தில் பெண்களுக்கு மார்பை மறைக்க முடியாத நிலை இருந்தது. மார்பை மறைக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டம்தான் மார் மறைக்கல் சமரம். 2 நூற்றாண்டுக்கு முன்பு திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா துருவிதாங்கூர் இனி சனாதன தர்ம அரசாக இருக்கும் என அறிவித்தார். அந்த சனாதன தர்மத்தின் பெயரில் பல கொடூரங்கள் நடந்தன. மனிதனுக்கு எதிரான செயல்பாடுகள், வரிகள் மக்களிடம் திணிக்கப்பட்டது. மனித உடல் பாகத்துக்கு வரி செலுத்தும் நிலை ஏற்பட்டது மிகவும் மோசமானது. பெண்கள் மார்பு மறைக்கக்கூடாது என சட்டம் மூலம் கொண்டுவந்தார்கள். அதை தடுக்கும் விதமாக நடந்ததுதான் தோள்சீலை போராட்டம். சனாதன தர்மத்தின் நாடு என்று அறிவித்த மார்த்தாண்ட வர்மா செய்ததை பற்றி சொன்னார்கள். இதை சனாதன தர்மம் என்ற பெயரில் சங்க பரிவார் பழய மன்னராட்சியை கொண்டுவரப்பார்க்கிறது. ஜனநாயகம் இவர்களுக்கு அலர்ஜி.
தாங்கள் உடைக்க முடியாத சக்தி என்ற பா.ஜ.க வாதம், தேசிய அரசியலில் உடைவதை இன்று காண முடிகிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக பீகாரில் நிதிஷ் கட்சி நிற்கிறது. இது பீகாரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பா.ஜ.க வின் மக்கள் விரோத போக்கால் ஹரியானாவில் தேவிலாலின் நூற்றாண்டு விழாவில் எதிர்கட்சிகள் பேரணி நடத்தின. 2024-ல் பா.ஜ.க-வின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற கோஷம் அதில் உயர்ந்தது. சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே பி.ஜே.பி உடன் உள்ளது. மகராஷ்டிரா உள்ளிட்ட இடைத்தேர்தலில்களில் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த டெல்லி மாநகராட்சி பா.ஜ.க கையைவிட்டு போனது. இதெல்லாம் நாட்டில் வளர்ந்துவரும் அரசியலின் சரியான அறிகுறிகள்.

பா.ஜ.க-வின் துன்பத்தை மக்கள் அறிந்துகொள்கிறார்கள்.. அவை மக்கள் மத்தியில் எதிரொலிக்காமல் இருக்க சங்கபரிவார் பிரிவினை அஜண்டாவை புகுத்துகிறார்கள். காசியும், மதுராவும் அடுத்ததாக பிடித்து எடுக்கலாம் என கூறுகிறார்கள். பசியும் அதனால் ஏற்படும் சமூக மாற்றங்களையும் கண்டுகொள்ளாமல் சங்கபரிவார் உள்ளது. திரிபுராவில் பா.ஜ.க வென்றதாக நாம் நினைக்கிறோம். கடந்த முறை 50 சதவீதம் ஓட்டு வாங்கியவர்களுக்கு இந்த முறை 10 சதவீதம் ஓட்டு குறைந்துள்ளது. சில கட்சிகள் ஓட்டு பிரிக்காமல் இருந்தால் அங்கு வேறு மாதிரி ஆகியிருக்கும்.

ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு மதம் என்று இந்தியாவை மாற்ற பார்க்கிறார்கள். தி.மு.க மொழி பாதுகாப்பு போராட்டம் நடத்தியது. இந்தி திணிப்புக்காக அவர்கள் முயல்கிறார்கள். மத்திய ஏஜென்சிகள் மூலம் அரசியல் செய்வது நமக்கு தெரிகிறது. அதை இன்னும் அதிகரிக்கப்பார்க்கிறார்கள். பெருமுதலாளித்துவ அரசியல் செய்கிறார்கள். எல்.ஐ.சி-யின் 70 ஆயிரம் கோடியை ஒருவர் விழுங்கியுள்ளார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகளை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். சி.பி.ஐ மீதுள்ள நம்பிக்கை தகர்ந்துள்ளது. இந்துத்துவ தந்திரம் ஆபத்தை உண்டாக்கும். மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். பா.ஜ.க-வை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமை நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கு தமிழக முதல்வருக்கு ஒரு அழைப்பை கொடுக்க விரும்புகிறேன். வைக்கம் போராட்டத்தின் 100-ம் ஆண்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்தப்போகிறோம். அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் வரவேண்டும் என அழைக்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க `ஸ்டாலின் வைத்த கோரிக்கை; அழைப்பு விடுத்த பினராயி விஜயன்’ - பொதுக்கூட்ட ஹைலைட்ஸ்