புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ததையடுத்து, அது தொடர்பான விவாதம் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “நாடாளுமன்றம் கடந்த திங்கள்கிழமை தொடங்கியதிலிருந்து தொடர்ந்து 5 நாள்களாக முடங்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமரின் நண்பரான அதானிக்கு பொதுத்துறை நிறுவனங்களை எந்தவித நிபந்தனையுமின்றி கொடுத்ததுதான் அதற்குக் காரணம். பிரதமரின் பினாமிதான் அதானி. பிரதமரைப் போல முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நூற்பாலை மற்றும் சர்க்கரை ஆலையை தனியாருக்கு விட தயாராகி விட்டடார்.

அந்த வகையில், மோடியின் தம்பியாகச் செயல்படுகிறார் முதல்வர் ரங்கசாமி. பா.ஜ.க-வும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் புதுச்சேரியை குட்டி சுவராக்கி விட்டன. காரைக்கால் துறைமுகத்தை அதானிக்குக் கொடுத்தது போல, புதுச்சேரியை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் சின்ன மோடியான ரங்கசாமி. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுகிறது. 900 மதுக்கடைகள் வந்துவிட்டன. போதைப்பொருள்கள் கிடைப்பது எளிதாகிவிட்டன. ரெஸ்டோ பாருக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாக கைமாறுகிறது. அந்த வகையில், காலையில் பணம் கொடுத்தால் மாலையில் அனுமதி கிடைக்கும். இதன்மீது சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரி ஆட்சியில் எங்கும் லஞ்சம். வாங்கும் பணத்தை மூட்டை மூட்டையாக வேட்டியில் கட்டி, படுக்கைக்கு அடியில் வைக்கிறார்கள்.
கவர்னர் உரை என்பது கடந்த ஆண்டின் சாதனைகளையும், எதிர்கால செயல்பாடுகளையும் கோடிட்டு காட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் புதுவை பொறுப்பு கவர்னர் தமிழிசை ஆற்றிய உரை பொறுப்பற்ற உரையாகவும், உப்பு சப்பில்லாததாகவும் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை ஆளுங்கட்சியினர் பாராட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு ரூ.10,900 கோடிக்கு போடப்பட்ட பட்ஜெட்டில் ரூ.8,000 கோடியைத்தான் அரசு செலவு செய்திருக்கிறது. நிதி பற்றாக்குறைதான் அதற்குக் காரணம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்யும் திட்டங்களுக்கான நிதி ரூ.267 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. சிறப்புக்கூறு நிதியில் ரூ.166 கோடி நிதி செலவு செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.11,600 கோடியில் ரூ.9,000 கோடி சம்பளம், ஒய்வூதியம், மின்சார கொள்முதல், மானியம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும். மீதமுள்ள ரூ.2,600 கோடியில் ரூ.1,100 கோடி கூட்டுறவு மானியமாகச் சென்றுவிடும். எஞ்சிய தொகையில்தான் சாலை, குடிநீர், பராமரிப்பு வசதிகளை செய்ய வேண்டும். காஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என்பது நல்ல திட்டம்தான்.

ஆனால், அதற்கு நிதி எங்கிருந்து வரும் எனக் குறிப்பிடவில்லை. குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம்தான் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. கடந்த ஆண்டு ரூ.260 கோடி குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு இலவச அரிசி உட்பட அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து ரூ.14 கோடி குறைத்து ரூ.246 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் சிலிண்டருக்கு மாதம் ரூ.10 கோடி தேவை. இதற்கு எங்கிருந்து நிதி வரும்... முதலமைச்சர் எப்படி செயல்படுத்துவார்... தொழில்துறைக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி அறிவித்தனர். ஆனால் கடந்த ஆண்டு தொழில்துறைக்கு ரூ.87 கோடி நிதியை ஒதுக்கினர். நடப்பாண்டு ரூ.13 கோடி குறைத்து ரூ.74 கோடிதான் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவித்த 50 திட்டங்களில் ஒன்றைக்கூட அரசு நிறைவேற்றவில்லை. பெண்களுக்கான இலவச பஸ் பயணம் வரவேற்புக்குரியது. சாலைப் போக்குவரத்து கழகத்தில் பஸ்களே இல்லை. இருப்பது ஓட்டை, உடைசல் பஸ்கள்தான். நடப்பாண்டில் சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இதேபோல முன்னுக்குப் பின் முரணாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதனால்தான் இதை ஏமாற்றும் பட்ஜெட் என்று கூறுகிறோம். மூடப்பட்ட ஆலைகளை திறப்போம் என என்.ஆர்.காங்கிரஸும், பா.ஜ.க-வும் தேர்தல் அறிக்கையில் கூறின. தற்போது பட்ஜெட்டில் மாற்று ஏற்பாடு செய்வோம் என கூறுகின்றனர். என்ன ஏற்பாடு... தனியாருக்கு தாரை வார்ப்பதுதான் மாற்று ஏற்பாடா... சர்க்கரை ஆலையை தனியாருக்கு தாரை வார்ப்பதாகவே அறிவித்திருக்கின்றனர். இதில் மெகா ஊழல், பெருமளவு தொகை கைமாற வாய்ப்பிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளிடம் போக்குவரத்து போலீஸார் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவைக்கு வரும் பயணிகள் மனம் நொந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. ஹோட்டல்கள், உணவகத்தில் கலப்படம் நடக்கிறது. இதை கண்காணிக்கவோ, தடுக்கவோ அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எங்கள் ஆட்சியில் புதுவையின் வளர்ச்சி 9 சதவிகிதமாக இருந்தது. தற்போது 5 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. படித்த இளைஞர்கள் மாடு மேய்க்க வேண்டுமென ரங்கசாமி சொல்கிறார். வேலைவாய்ப்பு தர வழியில்லை. 10,000 காலி பணியிடங்களை அரசு நிரப்பும் என ரங்கசாமி மார்தட்டுகிறார்.
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை ரத்து செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான தகவல் அரசு ஊழியர் சம்மேளனம் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது. தலைமைச் செயலாளர், அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என முதலமைச்சர், அமைச்சர்கள் புலம்புகின்றனர். உங்கள் ஆட்சிதானே நடக்கிறது. அவர்களை மாற்ற வேண்டியதுதானே... நாங்கள் அதிகாரத்துக்குப் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகளை மாற்ற முடியாவிட்டால் பதவியில் ஏன் நீடிக்கிறீர்கள்... பதவி விலக வேண்டியதுதானே? கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தால் விசாரணை நடத்துங்கள். விசாரணையில் ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள். பொதுப்பணித்துறையில் 13 சதவிகிதம் கமிஷன் பெறுகின்றனர். இவற்றை பகிரங்கமாகக் கூறியும் சொரணை இல்லாத அரசு பதில்கூட தெரிவிக்காமல் உள்ளது. ஊழல், முறைகேடுகள் தொடர்பாக விஜிலென்ஸ் தலைவரான தலைமைச் செயலரிடமும், மத்திய விஜிலென்ஸ் துறைக்கும் புகார் அளித்திருக்கிறோம்” என்றார்.
மேலும் படிக்க ’’பிரதமர் மோடியின் பினாமிதான் அதானி!” – போட்டுத்தாக்கும் நாராயணசாமி