காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி, இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலம் தன்னையும் பல அரசியல்வாதிகளையும் மத்திய அரசு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக, லண்டனிலுள்ள கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், ``என்னுடைய போனில் பெகாசஸ் இருந்தது. அதிக எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளின் போனில் பெகாசஸ் இருந்தது.
உளவுத்துறை அதிகாரிகள், 'உங்கள் போனில் நீங்கள் பேசுவது பதிவுசெய்யப்படுகிறது, கவனமாக இருங்கள்' என என்னை அழைத்து எச்சரித்தனர். இது நாங்கள் உணரும் நிலையான அழுத்தம்தான். என்மீது கிரிமினல் வழக்குகள் போட முடியாத சூழல் இருப்பதால், பல குற்றவியல் வழக்குகள் (Criminal Liable Cases) பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும்விதமாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், ``பெகாசஸ் போனில் இல்லை, ராகுல் காந்தியின் மூளையில் இருக்கிறது. காங்கிரஸின் டி.என்.ஏ-வில் பெகாசஸ் நுழைந்திருக்கிறது. அவரின் (ராகுல் காந்தி) உளவுத்துறைக்காக பரிதாபப்படுகிறேன். அவர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார். நம் நாட்டுக்கு எதிராக அறிக்கை விடுகிறார்.

வெளிநாட்டு தூதரகங்களுக்குச் சென்று இந்தியாவுக்கு எதிராகப் பேசுகிறார். வெளிநாடுகளில் இந்தியாவை களங்கப்படுத்துவது காங்கிரஸின் புதிய அஜெண்டா. வெளிநாடுகளில் நாட்டை விமர்சிப்பது தேச விரோத நடவடிக்கை. எனவே நாடும், மக்களும் ராகுல் காந்தியை மன்னிக்க மாட்டார்கள்" என்று ராகுலைச் சாடியிருக்கிறார்.
மேலும் படிக்க "வெளிநாடுகளில் இந்தியாவை களங்கப்படுத்துவது காங்கிரஸின் புதிய அஜெண்டா!" - சிவராஜ் சிங் சௌஹான் காட்டம்