மகாராஷ்டிராவில் 6.8 லட்சம் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருக்கின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அதிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது ஒருவர் ஓய்வு பெறும் போது 32 ஆயிரம் சம்பளம் வாங்கினால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் ரூ. 16 ஆயிரம் கிடைக்கும். அதேசமயம் புதிய ஓய்வூதிய திட்டத்தில் 2,200 வரை மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும். இதையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கோரி கடந்த 14-ம் தேதியிலிருந்து மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனை, கல்வித்துறை ஊழியர்கள் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மருத்துவ பணிகள் மற்றும் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசு நிர்வாகமும் முடங்கியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து முடிவு செய்ய மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஊழியர்கள் நிராகரித்துவிட்டனர். தாமதப்படுத்தும் நோக்கில் தான் கமிட்டி அமைத்திருப்பதாக ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ``சில தொழிற்சங்கங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறது. கமிட்டியின் அறிக்கை கிடைத்த பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும்.
பழைய ஓய்வூதியத்தால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை குறித்து 2030-ம் ஆண்டுதான் முழுமையாக தெரிய வரும். 2030-ம் ஆண்டு அதிகப்படியான ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர்” என்று தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு இமெயில் மூலமும், வாட்ஸ்ஆப் மூலம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. பணிக்கு வரவில்லையெனில் சம்பளம் கிடையாது என்றும், இலாகா பூர்வ விசாரணை நடத்தப்படும் என்றும் கூறி 68 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக புனே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் போராட்டம் தொடரும் என்று மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தின் செயலாலர் விஹாஸ் கட்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ``தாமதப்படுத்தும் நோக்கில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அவசர பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். அதேசமயம் இரண்டு சிறிய தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தால் அரசுக்கு 1.1 லட்சம் கோடி அளவுக்கு நிதிச்சுமை ஏற்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க `பழைய ஓய்வூதியத்தை கொண்டு வரவேண்டும்' - அரசு ஊழியர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த மகாராஷ்டிரா