Doctor Vikatan: அடிக்கடி விக்கல் ஏற்படுவது ஏன்? எனக்குத் தெரிந்த ஒரு நபருக்கு விக்கல் வந்தால் பல மணி நேரம் நீடிக்கிறது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். விக்கலுக்கெல்லாம் அறுவை சிகிச்சை அவசியமா?
- AYYAVU MUTHU, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதில் இருந்து அது முதியவராகும் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு விக்கல் வரலாம். நெஞ்சுப்பகுதிக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் (Diaphragm) என்ற பகுதி தானாகவே சுருங்க ஆரம்பிக்கும். அப்போது விக்கல் வரும். பொதுவாக உதரவிதானம் உள்வாங்கும்போது , நுரையீரலுக்குள் காற்று போகும். உதரவிதானம் ஓய்வெடுக்கும்போது நுரையீரலுக்குள் உள்ள காற்று வெளியே போகும்.
விக்கல் வந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் நின்றுவிடும். சிலருக்கு அது நீண்ட நேரம் நீடிக்கலாம். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள்வரை நீடிக்கும் விக்கலானது, அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதால் வரலாம். அதிக காரமுள்ள உணவுகளால் வரலாம். மது அருந்துவதால் வரலாம். சோடா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும், அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும்கூட விக்கல் வரலாம். திடீரென காற்றின் வெப்பநிலை மாறும்போதுகூட சிலருக்கு விக்கல் வரும்.
சாப்பிடும்போது சிலர் நிறைய காற்றை விழுங்குவார்கள். குறிப்பாக சூயிங்கம் மெல்லும்போது இப்படி நடக்கும். அதனாலும் விக்கல் வரலாம். அதீத ஸ்ட்ரெஸ் அல்லது அதீதமாக உணர்ச்சிவசப்படுதல் காரணமாகவும் விக்கல் வரலாம். பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு விக்கல் அடிக்கடி வரும். மனரீதியான படபடப்பு, பதற்றம் அதிகமுள்ளோருக்கும் விக்கல் வரலாம். வயிற்றுக்குள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும், ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் மற்றவர்களைவிட அதிகமாக விக்கல் வரும்.
விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும். மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும். கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும். ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும்.
இதையெல்லாம் முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை, அதாவது தொடர்ந்து இரண்டு நாள்களாக விக்கல் நிற்கவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டும், அவர்கள் கரோட்டிடு சைனஸ் மசாஜ் ( Carotid sinus massage ) செய்வார்கள். கரோட்டிடு ரத்தக்குழாய் கழுத்துப் பகுதியில் இருக்கும். அதில் மருத்துவர் மசாஜ் செய்யும்போது விக்கல் நிற்கும்.

மூக்கு வழியே வயிற்றுக்குள் டியூப் விட்டு ஒரு சிகிச்சை செய்வார்கள். உதரவிதானத்தில் உள்ள குறிப்பிட்ட நரம்பில் அனஸ்தீசியா கொடுப்பதன் மூலமும் விக்கலை நிறுத்தச் செய்வார்கள்.
இதயத்துக்கு பேஸ் மேக்கர் வைப்பதைப் போல உதரவிதானத்துக்கும் பேஸ்மேக்கர் வைக்கலாம். அது உதரவிதானம் சீராக இயங்க உதவி, விக்கலையும் தடுக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: பலமணி நேரம் நீடிக்கும் விக்கல்.... அறுவைசிகிச்சையில்தான் குணப்படுத்த முடியுமா?