Doctor Vikatan: என் அம்மாவுக்கு அடிக்கடி கால் வலி வரும். வலி வரும்போதெல்லாம் தைலம் தடவிக் கொள்வார். அப்போதுதான் அது குணமானதாக உணர்வார். ஒரு கட்டத்தில் தைலம் தடவிக்கொள்வது அவரது பழக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது? உண்மையிலேயே தைலம் தடவுவதால் வலி போகுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் பாபு நாராயணன்

இந்தக் கேள்வியை பல கோணங்களில் அணுக வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் விஞ்ஞான ரீதியான உண்மை இருக்கிறது. அதாவது மேலோட்டமாக நாம் தடவக்கூடிய எண்ணெயோ, தைலமோ, வலி நிவாரணி ஸ்பிரேயோ.... இவை மூலமாக அந்த இடத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து வலி ஓரளவுக்கு குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது மருத்துவ உண்மை.
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை சில எண்ணெய்கள், சருமத்தின் வழியே ஊடுருவி, வலியிலிருந்து நிவாரணம் தருவதாகச் சொல்கிறது. சரி... உங்கள் அம்மாவின் இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு வருவோம். இதுபோன்ற வலிகளுடன் மருத்துவரிடம் ஒருவர் வரும்போது அவருக்கு வலியுள்ள பகுதியின் மேலே அடித்துக்கொள்கிற ஸ்பிரே, தடவிக்கொள்கிற தைலம் போன்றவை பரிந்துரைக்கப்படும் அல்லது உள்ளுக்குச் சாப்பிடும் மாத்திரை, மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அடிக்கடி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்புகள் வரக்கூடும் என்பதை மருத்துவர்களும் மக்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டேதான் இருக்கிறோம்.
எனவே மேல்பூச்சாக மருந்துகளைத் தடவுவதால் சிலருக்கு நிவாரணம் கிடைக்கும். அதனால் தவறோ, பாதிப்புகளோ இல்லை. உங்கள் அம்மாவுக்கு இருக்கும் இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது.

உங்கள் அம்மாவுக்கு அந்தத் தைலத்தால் நிவாரணம் கிடைப்பதாக நினைக்கும்போது அதை அனுமதிப்பதில் தவறில்லை. ஏனென்றால் மூட்டுவலிக்கு மருந்து, மாத்திரைகள் பலனளிக்காத பட்சத்தில், அடுத்தகட்டமாக அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். அது எந்த அளவுக்கு அவருக்கு ஏற்படையதாக இருக்கும் என்று தெரியாது. எனவே உங்கள் அம்மாவின் இந்தப் பழக்கம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: வலிக்குத் தடவும் தைலம்... பழக்கமாக மாறினால் பிரச்னையில்லையா?